உள்ளாட்சி இடைத் தேர்தல்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக, மதிமுக ஆகியவை அறிவித்துள்ளன.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப் போவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலேயே பணபலம், படைபலம், அதிகாரபலம் ஆகியவற்றின் மூலம் கடைசி ஒரு மணி நேரத்தில் 30 விழுக்காடு அளவுக்கு வாக்குகள் பதிய வைக்கப்பட்டதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்தச் சூழ்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலை நடத்துபவர் மாநிலத் தேர்தல் ஆணையர். இவர், சென்னை மாநகராட்சித் தேர்தலை வன்முறை மூலம் நடத்திக் காட்டியதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திடம் இருந்து கண்டன சான்றிதழ் பெற்றவர்.
இப்படிப்பட்டவருடைய மேற்பார்வையில் நடக்கும் தேர்தல் நிச்சயமாக நியாயமாக நடக்காது.
எனவே, 27.2.2009 அன்று நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல்களை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதிமுகவும்..
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில் தற்போது நடக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து எப்படியாவது வெற்றியை பெற்று மக்கள் மன்றத்தில் செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தைக் காட்ட திட்டமிட்டிருக்கிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சியினுடைய ஒரு எடுபிடி ஏஜென்டாவார். எனவே இந்த தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications