ஈழத் தமிழர்களைக் காப்பதில் கருணாநிதிக்கே முதலிடம்: ஸ்டாலின்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான வழியில் சுமூகத் தீர்வு காணவும், திமுக தலைமையில் தமிழர் நல உரிமை பேரவை துவக்கப்பட்டுள்ளது.
இதில் திமுக, திக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 3 நாள் பேரணிகள், கூட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று சென்னையில் திமுக பொது செயலர் அன்பழகன் தலைமையில் பேரணி நடந்தது.
இன்று இரண்டாவது நாள் பேரணி உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இதில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சுதர்சனம், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
அரசியல் பிழைப்புக்காகவும், தாங்களும் தலைவர்கள் என்பதை காட்டி கொள்வதாகவும் சில கட்சி தலைவர்கள் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக நல உரிமை பேரவை சார்பில் பேரணிகள் நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிஞர் அண்ணா தலைமையில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முன்மொழிந்தவரே நமது தலைவர் தான்.
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச் செல்வதுடன் தொடர்ந்து நாம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்பது பற்றிதான் அதிக நேரம் பேசப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக பாடுபடும் தலைவர்களில் தமிழக முதல்வருக்கு தான் முதல் இடம். சட்டமன்றத்தில் இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்றார் ஸ்டாலின்.
தூத்துக்குடியில் கருப்புகொடி பேரணி
ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை அரசுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூக்குக்குடியில் கருப்பு கொடி பேரணி நடந்தது.
பாலவிநாயகர் கோயில் தெருவில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு ஈழதமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் தமிழ்நேயன் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் போத்தியடியான், நகர செயலாளர் ஞானசேகர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த கண்டன பொதுகூட்டத்தில் நல்லகண்ணு பேசுகையில்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 இலங்கை ராணுவத்தினருக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தகவல் கிடைத்தவுடன் அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசே செய்தி வெளியிட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழர்களி்ன் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு சென்னையிலேயே பயிற்சி அளிக்க முடிவு செய்திருந்தால் மறைமுகமாக எவ்வளவு உதவி செய்திருப்பார்கள், தமிழக அரசு கூறிய பின்பு அவர்கள் வெளியேறி விட்டார்கள் என்பதும் உண்மையில்லை. தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications