அழகிரி, கனிமொழி போல பிறந்திருந்தால் அரசியல் பாதை எளிதாக இருந்திருக்கும்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மு.க.அழகிரி, கனிமொழி நீங்களும் (அதிமுகவினர்), நானும் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் அரசியல் பாதை எளிதாக இருந்திருக்கம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் - கீர்த்திகா, முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான ஜெயக்குமாரின் மகன் ஜெயசிம்மன் - மலர்விழி திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது.

ஜெயலலிதா திருமணங்களை நடத்தி வைத்தார். மணமகன் களிடம் ஜெயலலிதா மங்கலநாணை எடுத்துக் கொடுத்து அட்சதை தூவி மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார்.

பின்னர் ஜெயலலிதா பேசியதாவது:

இந்த திருமணங்களை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த பெருமைப் படுகிறேன். ஓ.பன்னீர்செல்வமும், டி.ஜெயகுமாரும் கடந்த வந்த பாதைகள் இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினையாக இருக்கும்.

இன்றுள்ள இளைஞர்களுக்கு எல்லாமே அவசரம் தான். உடனே கட்சிக்கு வர வேண்டும். உடனே பொறுப்புக்களை பெற வேண்டும். புகழும், செல்வமும் சேர்க்க வேண்டும். உடனே எம்எல்ஏ ஆக வேண்டும். மந்திரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

பரதனுக்குப் பிறகு பன்னீர் செல்வம் ...

அரசியல் பொறுப்பு என்பது இன்ஸ்டன்ட் ப்ரூ காபி போல உடனடியாக கிடைத்துவிடாது. பன்னீர்செல்வமும், ஜெயகுமாரும் கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் சாதாரண பொறுப்பில் இருந்து மாநில பொறுப்பு வரை வந்து அமைச்சர் களாகவும், தலைமைக்கழக நிர்வாகி களாகவும் இருந்து இருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டது. முதல்வர் பொறுப்பில் இருந்த ஒருவர் அதில் இருந்து விலகி மீண்டும் உரியவரிடமே அந்த பொறுப்பை விட்டு சென்றிருக்கிறார். உலகில் இப்படி ஒரு வரலாறு எங்கும் இருந்ததாக தெரியவில்லை. ராமாயணத்தில் பரதன் தான் இப்படி நடந்திருக்கிறார்.

அரசியல் பொறுப்புக்கு வருவதற்கு பொறுமையோடு இருந்து கட்சியின் மீதும், தலைமையின் மீதும் கொண்ட நம்பிக்கையால் பொறுப்புக்களை பெற வேண்டும். சில இளைஞர்கள், கல்லூரி படிப்பை முடித்து அரசியலுக்கு வந்து பல ஆண்டாகிறது. ஆனால் கட்சியில் உள்ள சில மூத்தவர்கள் எங்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட மனுச் செய்தவர்களிடம் நான் விசாரித்த போது இதை என்னிடம் அவர்கள் தெரிவித்தனர். ஒரு அரசியல் கட்சியில் இப்படித்தான் இருக்கும்.

ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தில் பொறுப்புகளுக்கு வருவதற்கு போட்டிகள் இருக்கத்தான் செய்யும். இதையெல்லாம் மீறி போராடித் தான் வெற்றி பெற வேண்டும். எனக்கும் அது தான் நடந்தது என்று அவர்களிடம் சொன்னேன்.

எனக்கு அரசியலுக்கு வர ஆசையில்லை. ஆனால் 1982ம் ஆண்டு எம்ஜிஆர் என்னை கைப்பிடித்து அழைத்து வந்து அரசியலில் விட்டுவிட்டார். அப்போது ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோம சுந்தரம் போன்ற எத்தனையோ மூத்த தலைவர்கள் என்னை எதிர்த்தார்கள். அதையெல்லாம் தாண்டித்தான் தொண்டர்களின் ஆதரவோடு கரடுமுரடான பாதைகளை கடந்து பெரிய பொறுப்புக்களுக்கு நான் வந்திருக்கிறேன்.

ஒரு பெண்ணாக இருந்து போட்டிப் போட்டு இந்த அளவுக்கு என்னால் உயர முடிந்தது என்றால், உங்களால் முடியாதா? வாழ்க்கையில் முடியாதது என்பது எதுவுமில்லை.

வாழ்க்கை என்பது ஒரு மலர் பாதையல்ல. அது ஒரு போராட்டம் தான். அதிலும் அரசியல் பாதை அவ்வளவு எளிதானதல்ல. அழகிரி, கனிமொழி போல நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கு அரசியல் பாதை எளிதாக இருந்திருக்கும்.

ஆனால் நீங்களும், நானும் அப்படி பிறக்கவில்லை. எனவே அரசியல் இயக்கத்தில் போராடிப் போராடித் தான் முன்னேற வேண்டும். இதனை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எம்.சி., எம்எல்ஏ ஆவதற்கு மட்டும் போராட வேண்டும் என்று கருத வேண்டாம். இன்றைக்கு தமிழ்நாட்டில் இருள் சூழ்ந்திருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஒரு குடும்பம் என்ற பெயரில் ஒரு கொள்ளைக் கூட்டம் மாநிலத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம்ஒழுங்கு சீர்குலைவு என்று ஆன்றாட வாழ்க்கைக்கே மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே, இவர்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய போராட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும். இதனை போராட்டம் என்று கூட நான் சொல்ல மாட்டேன். ஒரு மிகப்பெரிய போருக்கு தயாராக வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

வரும் தேர்தலை பயன்படுத்தி இந்த மக்கள் விரோத சக்திகளையும், இந்த ஆட்சியையும் தூக்கியெறிய வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் இந்த அறப்போரில் நாம் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் ஜெயலலிதா.

நிகழ்ச்சியில் மணமக்களை துக்ளக் ஆசிரியர் சோவும் வாழ்த்திப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+