பெங்களூரில் வள்ளுவர் சிலை..சென்னையில் சர்வக்னர் சிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலையை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல பெங்களூரில் திறக்கப்படாமல் உள்ள திருவள்ளுவர் சிலையை திறக்க ஒத்துழைப்பதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா சம்மதித்துள்ளதாக தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அன்பழகன் பேசுகையில்,

சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்னாவின் சிலையை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று முதல்வர் கருணாநிதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து நமது பெருந்தன்மையை உணர்ந்து பெங்களூரில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஒத்துழைப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா சம்மதம் தந்துள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தில் வாழும் கன்னடர்களும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கனவு நிறைவேறும். மாநிலத்துக்கு மாநிலம் இதுபோன்று நல்லுறவு தழைத்து செழிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். நோக்கம் என்றார் அன்பழகன்.

திருவள்ளுவர் சிலையின் சோகக் கதை..:

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையோரம் சாக்குப் பையால் மூடிக் கிடக்கிறது திருவள்ளுவர் சிலை. இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 18 வருடங்களாக.

1991ம் ஆண்டு இந்த சிலை, அல்சூர் கங்காதர செட்டி சாலையில் ஏரியின் அருகே உள்ள பூங்காவில் நிறுவப்பட்டது. ஆனால் அப்போது காங்கிரஸ் முதல்வராக இருந்த பங்காரப்பாவும், கன்னட சளுவளி கட்சி உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் சிலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் சிலை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை விடிவுகாலம் பிறக்காமல் சாக்குப் பைக்குள் மறைந்திருக்கிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் சிலையைத் திறக்க பல்வேறு முயற்சிகளை, சிலையை நிறுவிய பெங்களூர் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதியும் சிலையைத் திறக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இருப்பினும் பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான் பெங்களூர் தமிழ்ச் சங்கமும், சென்னையில் உள்ள கன்னட பாலகா (கன்னட சங்கம்) இணைந்து ஒரு கோரிக்கையை தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு வைத்தன.

அதாவது 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞர் சர்வக்னாவின் சிலையை சென்னையி்ல் நிறுவலாம். அதேபோல திருவள்ளுவர் சிலைய பெங்களூரில் திறக்கலாம். இதற்கு இரு மாநில அரசுகளும் சம்மதிக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.

2000மாவது ஆண்டு இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. வைக்கப்பட்டவுடனேயே சென்னை மாநகராட்சி நிர்வாகம், இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

சென்னை அயனாவரத்தில் உள்ள கன்னட பாலகா சங்க வளாகத்தில் சர்வக்னா சிலையை நிறுவ அனுமதி தரப்படும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு இந்த அளவுக்கு இறங்கி வந்தும் கூட பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பது குறித்து கர்நாடக அரசு மூச்சு கூட விடாமல் இருந்து வந்தது.

2001ம் ஆண்டு திருவள்ளுவர் சிலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போதைய முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா உறுதியளித்தார். ஆனால் பின்னர் அந்த உறுதிமொழியை அவரும் மறந்து விட்டார். அவருக்குப் பின்னால் வந்த அரசுகளும் மறந்து விட்டன.

இதற்கிடையே, திருவள்ளுவர் சிலையை அல்சூர் ஏரிப் பூங்காவில் நிறுவாமல், தமிழ்ச் சங்க வளாகத்திற்குள்ளேயே நிறுவிக் கொள்ள வேண்டியதுதானே என்று கன்னட சங்கங்கள் கூறின.

இதற்கு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் கா.சுப்ரமணியன் கடும் கண்டனம் தெரிவித்தார். திருவள்ளுவர் தேசியக் கவிஞர் இல்லையா. தேசிய ஒருமைப்பாடு குறித்து பெரும் கேள்விக்குறியை கன்னட சங்கங்களின் நிலை எழுப்புகிறது. ஒரு மாபெரும் புலவனின் சிலையை பக்கத்து மாநிலத்தில் போய் நிறுவுவதற்கு இவ்வளவு தடையா என்று வேதனை தெரிவித்திருந்தார் கா.சுப்ரமணியன்.

இவ்வாறாக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது திருவள்ளுவர் சிலை விவகாரம். இந்த நிலையில்தான் சிலையை திறக்க ஒத்துழைப்பு தருவதாக எதியூரப்பா கூறியுள்ளதாக நிதியமைச்சர் அன்பழகன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு விடிவு பிறக்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+