போலீஸ் வெறியாட்டம்-அரசை கலைக்க வேண்டும்: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர் நீதிமன்றத்திலேயே சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசை அரசியல் சட்டத்தின் 356வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி உடனடியாக கலைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, உள்ளாட்சித் தேர்தல்கள், சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் திமுகவினரால் வன்முறை நடத்தப்பட்ட போதும், சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டபோதும் கை கட்டி வேடிக்கை பார்த்தது.

இவ்வாறு 33 மாத காலம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், பல வன்முறைச் சம்பவங்களை வேடிக்கை பார்த்து, தற்போது வன்முறையை எப்படி நிகழ்த்துவது என்பதை காவல் துறையினர் கற்றுக் கொண்டுவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் கூட இதுபோன்ற வன்முறையை நடத்த முடியாது என்ற அளவுக்கு காவல் துறையினரின் அராஜகம் நடைபெற்றுள்ளது.

இதன் விளைவாக உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் காவல் துறையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அடித்து நொறுக்கியுள்ளனர். காவல் துறையினரின் வன்முறை வெறியாட்டத்துக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு முன்பாகவே, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 17ம் தேதி சில வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலும் மிகவும் கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத்துக்கு உள்ளேயே பாதுகாப்பற்ற சூழ்நிலை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் நிர்வாகத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பொதுமக்கள் முறையிட வேண்டிய புனித இடமான நீதிமன்றம் வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது. சட்டம்- ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல் நிலையம் தீப்பற்றி எரிகிறது. எங்கு சென்று முறையிடுவது, யாரிடம் பாதுகாப்பு கேட்பது என்று தெரியாமல் பொதுமக்கள் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வன்முறைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் பத்திரிகையாளர்களும் தாக்கப்படுகிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு காட்டாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தாத, அரசியல் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டிய உயர் நீதிமன்றத்திலேயே சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசை 356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி உடனடியாக கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+