For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டிப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

By Sridhar L
Google Oneindia Tamil News

Army removes the body of 6 yr old boy from deep borewell
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆழ் துளைக் கிணற்றில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 30 மணி நேரப் போராட்டம் வீணாகி சிறுவனின் இறந்த உடலை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராஜதானியை அடுத்துள்ள தோப்புபட்டி கிராமத்தை சேர்ந்தவர் எட்டப்பன். இவருடைய மனைவி பெயர் அழகம்மாள். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகன் மாயி இருளன் (6). ஒன்றாவது வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் ராஜதானி காவல் நிலையம் அருகே உள்ள செல்வம் என்பவரின் தோட்டத்துக்கு அழகம்மாள் வேலைக்கு சென்றார். மகன் மாயி இருளனையும் உடன் தன்னுடன் அழைத்து சென்றார்.

தோட்டத்தில் அழகம்மாள் வேலை செய்து கொண்டு இருந்தபோது மாயி இருளன் விளையாடிக்கொண்டு இருந்தான். அந்த தோட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு 550 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. பின்னர் குழாய் பதிக்காததால் அதை அப்படியே விட்டு விட்டனர்.

ஆனால் குழியை மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். ஒரு ஆள் உள்ளே இறங்கும் அளவிலான அந்த குழி, புதர்களால் மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாயி இருளன் அம்மாவை நோக்கி ஓடி வந்துள்ளான். அப்போது குழியில் விழுந்து விட்டான். அம்மா என்று அலறியபடி விழுந்த சிறுவனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

போலீஸார், தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போனது. சிறுவனை மீட்க பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இயந்திரம் சிறியதாக இருந்ததால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக பெரிய பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சிறுவனை மீட்க முடியவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை முயற்சி செய்தும் சிறுவனை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் நவீன கருவி கொண்டு வந்திருந்தனர். அந்த கருவியில் கை போன்ற அமைப்பு, கேமிரா, மின் விளக்கு பொருத்தப்பட்டு குழிக்குள் கம்ப்ரசர் இயந்திரம் உதவியுடன் கயிறு மூலம் அனுப்பினார்கள்.

வெளியே கேமிராவுடன் இணைக்கப்பட்ட மானிட்டரில் சிறுவன் இருக்கும் இடத்தை தேடினார்கள். ஆனால் 80 அடி ஆழம் வரை தேடியும் சிறுவன் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.

இதற்கிடையே திருச்சி மற்றும் பெங்களூரில் உள்ள துணை ராணுவ படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து துணை ராணுவ படை அதிகாரி பி.டி.தாமஸ் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணிக்கு ராஜதானி வந்து சேர்ந்தனர். அவர்கள் மீட்பு பணி குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் அந்த குழியில் நீளமான கம்பி மற்றும் கயிறுகளை செலுத்தி சிறுவன் இருக்கும் இடம் தட்டுப்படுகிறதா என்று தேடினார்கள். ஆனால் சிறுவன் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. சிறுவன் விழுந்த பின்னர் அவனின் மீது மண் விழுந்து மூடி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

5 வருடங்களுக்கு முன்பு 510 அடி ஆழத்துக்கு போர்வெல் போடப்பட்டு இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பெய்த மழை காரணமாக 200 அடிவரை மண்மூடி இருக்கலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் 80 அடிக்கு மேல் குழி நேராக செல்லாமல் பக்கவாட்டில் செல்வதாக கருதப்படுகிறது. இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து ராணுவத்தினர் நீளமான கம்பியை அடி முனையில் வளைத்து குழிக்குள் மெதுவாக செலுத்தி சுழற்றினார்கள். அப்போது ஏதோ தட்டுப்படுவது போல் தெரிந்தது. மெதுவாக கம்பியை சுழற்றி மேலே கொண்டு வந்தனர். அப்போது கம்பியில் சிறுவன் சிக்கி இருப்பது போல் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து மெதுவாக மேலே கொண்டு வந்தனர். அப்போது சிறுவன் இறந்து போய் இருந்தது தெரியவந்தது. சிறுவனின் பனியன் கொக்கியில் சிக்கியதால் உடலை எளிதாக ராணுவத்தினர் மேலே எடுத்தனர். அதன்பின்னர் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிறுவன் இறந்ததை உறுதி செய்தனர்.

கிட்டத்தட்ட 30 மணி நேரமாக நடந்த இந்த மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்தததால் ராஜதானி மக்கள் பெரும் சோகமடைந்தனர். தாயார் அழகம்மாள் கதறியபடி மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

ஜெயலலிதா ரூ.50 ஆயிரம் உதவி:

சிறுவன் மாயிி இருளனின் மரணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட தோப்புப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்டப்பன், வீரசன்னம்மாள்புரம் இளம் பெண்கள் பாசறையின் தலைவர் அழகம்மாள் தம்பதியின் மகன் சிறுவன் மாயி இருளன், அந்த பகுதியில் தனது தாயுடன் சென்று கொண்டிருந்த போது 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டதை தொடர்ந்து மாலையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டான் என்ற செய்தி அறிந்து என் மனம் துடிதுடிக்கிறது.

ஆறு வயது சிறுவனை இழந்து தவிக்கும் எட்டப்பன்-அழகம்மாள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மரணம் அடைந்த மாயி இருளன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.50,000 குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X