Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமதாசுக்கு 'ஸ்டடி மைன்ட்' இல்லை-ஆற்காடு தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமதாசுக்கு 'ஸ்டடி மைன்ட்' இல்லை. ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்று அங்கே போனால் (அதிமுக) அதிக இடம் கிடைக்குமா, இங்கேயே (திமுக) நீடித்தால் அதிக இடம் கிடைக்குமா? என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு ஒரு 'ஸ்டடி மைன்ட்' வேண்டும். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்பதைப் போல அங்கே போனால் அதிக இடம் கிடைக்குமா, இங்கேயே நீடித்தால் அதிக இடம் கிடைக்குமா? என்று நினைத்துக்கொண்டு செயல்படக்கூடாது.

அது மாத்திரமல்ல, அன்றாடம் தன் பேரில் ஏதாவது ஒரு அறிக்கை வந்தால் தான் தன்னை தமிழ்நாட்டு மக்கள் மறக்காமல் இருப்பார்கள் என்று மனதிலே எண்ணுவதையெல்லாம் பேசுவதும் கூடாது.

எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்றால் டாக்டர் ராமதாஸ் முதல் நாள் கலைஞர்தான் எல்லாம், அவர் தான் வழி நடத்த வேண்டும் என்கிறார். அடுத்த நாள் இந்த ஆட்சிக்கு தைரியமில்லை, ஆட்சி கலைப்புக்கு அஞ்சுகிறார்கள் என்கிறார்.

நேற்றைய தினம் கூட்டாக அளித்த பேட்டியின் போது டாக்டர் ராமதாஸ் திமுக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு அந்த எண்ணம் இருப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லையே! கலைஞர் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் இவர்கள் மீது சொல்லவில்லையே?.

மேலும் டாக்டர் தாங்கள் யாரும் சதிகாரர்கள் அல்ல என்று பேட்டியிலே சொல்லியிருக்கிறார்கள். அவரைப் பற்றிச் சொல்லாததையெல்லாம் யாரோ சொல்லிவிட்டதாக அவரே கூறிக் கொண்டு எதற்காக பதில் சொல்லிக் கொள்கிறார்?.

சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று யார் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றித் தான் "ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார்கள்'' என்று சொல்கிறோம். உடனே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை'' என்பதைப் போல டாக்டர் பதில் சொல்ல முற்படுவானேன்.

மேலும் டாக்டர் தனது பேட்டியில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தான் இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியதாகவும், ஆளுங்கட்சியாக இருந்தபோது எந்த போராட்டமும் நடத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

இதே கருத்தை அவர் சில நாட்களுக்கு முன்பு பேசி, திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது என்னென்ன போராட்டங்களை எந்தெந்த தேதிகளில் நடத்தியது என்ற பட்டியலையே முதல்வர் கருணாநிதி பட்டியலாகக் கொடுத்திருந்தாரே, அதை டாக்டர் ராமதாஸ் படிக்கவில்லையா?.

திமுக ஆட்சியிலே இருந்தபோது தானே, இலங்கை தமிழர் பிரச்சனைக்காக என்று காரணம் கூறி ஆட்சி கலைக்கப்பட்டது. அதைக் கூட இல்லை என்று மறுக்கிறாரா?

முதல்வர் உண்ணாவிரத அறிவிப்பையே நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார் என்றால், இதுவரை எதற்கெடுத்தாலும் நாடகம் என்று ஜெயலலிதாவும், வைகோவும் தான் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் டாக்டர் ராமதாசும் சேர முயற்சிக்கிறாரா?.

பழி போடுவதும், பழி வாங்குவதும் கலைஞர் பாணி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உங்களை கைது செய்து சிறையிலே அடைத்தார்களே, அதைப்போல கலைஞர் ஏதாவது செய்து விட்டாரா?.

உங்களை கைது செய்தபோது, அதைப்பற்றி அறிக்கை விட்ட ஜெயலலிதா ஏ.சி. அறையிலே இருந்தவர்களுக்கு சிறையிலே இருக்க முடியாமல் மனைவியை தூதாக அனுப்பி வைத்தார்கள் என்று குற்றம் சாட்டினாரே, அப்படி ஏதாவது கலைஞர் தற்போது உங்கள் மீது பழி போட்டு விட்டாரா?.

மருத்துவமனையிலே முதுகுத் தண்டிலே அறுவை சிகிச்சை செய்த நிலையிலே கூட 24 மணி நேரமும் மக்கள் பிரச்சனைக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவரைப் பார்த்து நா கூசாமல் நாடகம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கே அது சரியாகப்படுகிறதா?.

நாளைக்கே கூட்டணி வரலாம், வராமல் போகலாம், அப்போது உங்களைச் சந்திக்கும்போது, கலைஞர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று சொன்ன சொல் போகுமா?

உறவு இருக்கட்டும், இல்லாமல் போகட்டும், ஆனால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது. ஆனால் நீங்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். கலைஞரைப் பொறுத்தவரை அவர் பழி வாங்கவும் மாட்டார், பழி போடவும் மாட்டார். அதற்கு தமிழ்நாட்டில் வேறொருவர் இருக்கிறார். அவர் கடைக்கண் பார்க்க மாட்டாரா என்று நீங்கள் தவிப்பது எங்களுக்கு நன்றாக தெரியவே தெரிகிறது.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+