சத்யம்-லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
டெல்லி: லோக்சபாவில் இன்று சத்யம் ஊழல் பெரும் அமளியை ஏற்படுத்தியது. கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை என்று கூறி இடதுசாரிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சத்யம் ஊழல் தொடர்பாக இன்று அமைச்சர் குப்தா ஒரு அறிக்கையை வாசித்தார். அவர் கூறுகையில், சத்யம் ஊழல் தொடர்பாக அனைத்து விசாரணை அமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. விசாரணை முழு வீச்சில் இருக்கிறது. இதில் எந்த தாமதப்படுத்தும் செயல்களும் இல்லை என்றார்.
ஆனால் இதைக் கேட்டதும் இடதுசாரிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள், தெலுங்கு தேசம் எம்.பிக்கள் எழுந்து அரசு சத்யம் ஊழல் விசாரணையை வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறது. அமைச்சரின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கோஷமிட்டனர்.
மேலும், பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஊழலை எப்படி அரசின் கண்காணிப்பாளர்கள் சரிவர கவனிக்காமல் அலட்சியமாக இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் சூடாக பதிலளித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாதம் மூண்டது.
இதையடுத்து இடதுசாரி உறுப்பினர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications