பி.எஸ்.எஃப் உதவி கோரும் வங்கதேச புரட்சிக்காரர்கள்
கொல்கத்தா: வங்கதேசத்தில் புரட்சியில் ஈடுபட்டு பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ள வங்கதேச ரைபிள்ஸ் படை புரட்சிக்காரர்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் உதவியைக் கோரியுள்ளனர். தேவைப்பட்டால் எங்களுக்கு உதவுங்கள் என்று அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ரைபிள்ஸ் படையின் தலைமையகத்தில் ரைபிள்ஸ் படை வீர்ரகள் சம்பள உயர்வு கோரி திடீர் புரட்சியி்ல் ஈடுபட்டனர்.
ரைபிள்ஸ் படையின் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சுட்டுக் கொன்று விட்டனர். இந்தக் கலவரத்தை தற்போது (தலைநகரில்) ராணுவம் கிட்டத்தட்ட அடக்கி விட்டது.
பெரும் திரளான ரைபிள்ஸ் படை வீரர்கள், ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட வீர்ரகள் கைது செய்யப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியுள்ளது.
பலர் டாக்காவை விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ராணுவம் இறங்கியுள்ளது. ஆனால் சாதாரண குடிமக்களைப் போல சீருடை இல்லாமல் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
தற்போது தலைமையகத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பிணைக் கைதிகளும் மீட்கப்பட்டு விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாள் கலகத்தில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வீரர்களால் கொல்லப்பட்ட 9 உயர் அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரைபிள்ஸ் படை தலைவர் மேஜர் ஜெனரல் ஷகீல் அகமதுவின் உடல் மீட்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இதற்கிடையே 100 அதிகாரிகளைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் வீரர்களின் பிடியிலிருந்து தப்பி அவர்கள் தலைமறைவாகியிருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு தூது விடும் வீரர்கள்
இதற்கிடையே, இந்திய எல்லையை ஒட்டியுள்ள குல்னா, ராஜ்சாஹி, ஷைலட் ஆகிய இடங்களில் உள்ள வங்கதேச ரைபிள்ஸ் படை முகாம் கமாண்டர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உதவியைக் கோரி கடிதம் அனுப்பியுள்ளனராம்.
அதில், எங்களைப் பிடிக்க ராணுவம் வருகிறது. அவர்கள் பிடிக்க வரும்போது நீங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும். உங்களைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம்.
ராணுவத்தை எதிர்த்து முடிந்தவரை போராடப் போகிறோம். முடியாதபட்சத்தில் உங்களிடம்தான் வருவோம். எங்களைக் காக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளதாம்.
இந்தக் கடிதங்கள் வந்திருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.
இருப்பினும் ரைபிள்ஸ் படையினரை காக்க இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை முயன்றார், வங்கதேச ராணுவம் நம் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது போராக மாறி விடும் என்பதால் இந்தப் பிரச்சினையை ஜாக்கிரதையாக கையாள எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒருவேளை வங்கதேச வீரர்கள் புகலிடம் கோரினால் அவர்களை கஸ்டடியில் வைத்துக் கொண்டு பின்னர் அவர்களை வங்கதேச ராணுவத்திடம் ஒப்படைத்து விடலாம் என எல்லைப் பாதுகாப்புப் படை முடிவு செய்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications