சிறை வாசலில் பிரசாரத்தை துவக்கினர் வைகோ

தூத்துககுடியில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டியதாக கைது செய்யப்பட்ட வைகோ உள்பட 159 பேர் பாளை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சிறை வாசலில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு, வைகோவிற்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் வைகோ கூறியதாவது:
மத்திய அமைச்சர் பிராணப் முகர்ஜி தூத்துக்குடியில் பேசியபோது இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை. போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக அவர் பித்தலாட்டம் ஆடுகிறார்.
முதல்வர் கருணாநிதி அதை ஆமோதித்து இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதாக பசப்பு வார்த்தைகள் கூறுகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிககப்பட வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பல மாதங்கள் ஆகிவிட்டது. எனினும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு முறைப்படி கேட்கவில்லை.
பிராணப் முகர்ஜி இலங்கை சென்றபோது போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை. இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியா வலியுறுத்தவில்லை என அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளர் பலிதா கோகனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை, தமிழர் வெளியேற கெடு அளிக்கப்பட்டது என அந்நாட்டு அமைச்சர் சமரசின்கா கூறியுள்ளார். மத்திய அரசு பிரபாகரனை ஒழிக்க முடிவு செய்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கூட்டாக செய்து சதி செய்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
அங்கு போரை நடத்துவதே இந்தியாதான். ரேடார், ஆயுதங்கள் சப்ளை, பாலாலி வி்மான தளத்தை புதுபிக்க வட்டியின்றி ரூ.1,000 கோடி கடன் என பல உதவிகளை இந்தியா இலங்கைக்கு செய்துள்ளது.
இதை கருணாநிதி எதிர்த்தாரா, இந்திய அரசின் கூட்டு சதியில் கருணாநிதிக்கு பங்கு உண்டு.
இந்தப் பாளை சிறை வாசலில் இரு்ந்தே என் பிரசாரத்தை தொடங்குகிறேன். இலங்கையில் தமிழர்களை கொல்லும் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும்.
என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். பிரபாகரனுடன் நான் எடுத்துக்கொண்ட படங்களை இலங்கை ராணுவம் உள்நோக்கத்துடன் இப்போது வெளியிட்டுள்ளது. அவை பழைய படங்கள். இருந்தபோதிலும் அந்த படங்கள் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வன்னிப் பகுதிக்கு செல்வேன். விடுதலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக கூறுவது அபத்தமானது. விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்று அரசியல் நடத்தினால் அது விபச்சாரத்தை விட மோசமானது என்றார் வைகோ.
பின்னர் செய்தியாளர்கள், தேசத் தலைவர்களின் படத்தை எரித்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு,
இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், தூக்கு தண்டனைக்கே பயப்படமாட்டேன் என்று ஆவேசமாக பதிலளித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலி்ன்போது பொடாவில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஜாமீனி்ல் வெளியே வந்து தனது பிரச்சாரத்தைத் துவக்கினார். இப்போதும் சிறை வாசலிலேயே பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.
மதிமுகவுக்கு 6 தொகுதிகள்?:
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தபோது 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக இம்முறை அதிமுகவிடம் 8 தொகுதிகளைக் கேட்டு வருவதாகத் தெரிகிறது.
வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, நாகர்கோவில் ஆகிய 10 தொகுதிகளில் தங்களுக்கு 8 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியுள்ளது.
ஆனால், மதிமுகவுக்கு 8 சீட்களை ஜெயலலிதா கொடுக்க வாய்ப்பி்ல்லை. அவர்களுக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications