அரசு நிர்வாகத்தைக் கவனிக்க கருணாநிதிக்கு ஏது நேரம்?: ஜெ.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனக்கு எதிராக அறிக்கைகள் வெளியிடுவதில்தான் கருணாநிதி கவனம் செலுத்துகிறார். மாநில நிர்வாகத்தை கவனிக்கத் தவறிவிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் மூடப்பட்ட சென்னை சட்டக்கல்லூரியை திறக்க நடவடிக்கை எடுக்காததால் ஏராளமான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சில தவறான வழிகாட்டுதல்களால் சில மாணவர்களின் காட்டுமிரண்டித்தனமான செயலால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையை சரியாக கையாள முடியாததால், அதன் விளைவாக நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கல்வியாண்டு முடிவுக்கு வரும் தருவாயில் உள்ள சூழ்நிலையில் கூட, சட்ட அமைச்சரோ அல்லது கல்வி அமைச்சரோ இது குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
சென்னை உயர்நீதிமன்ற மோதல் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்த நிலையில் அரசு சார்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பணவீக்க விகிதம் உயர்ந்தபோது இருந்த அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் இன்னும் இறங்காததால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் இந்த விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு பயனேதும் இல்லை.
இடைத்தரகர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை வெளிக்கொண்டுவரவோ அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கவோ தமிழக அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியம் 6000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் அடைந்துள்ள போதிலும் மின்வெட்டு தொடர்வதாகவும் மின் உற்பத்தியைப் பெருக்குவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது.
நாகரீகமற்ற வார்த்தைகளால் என்னை வசைபாடுவதிலும் அல்லது தன்மீது தானே இரக்கம் கொண்டு அழுது வடியும் அறிக்கைகளை வெளியிடுவதிலும் நேரத்தை வீணடிக்கும் கருணாநிதிக்கு, உரிய முறையில் நிர்வாகம் செய்யும் வகையில் தங்கள் கடமைகளை செய்யுமாறு தனது அமைச்சர்களுக்கு அறிவுரை கூற நேரம் இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமே என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications