சொன்னபடி வேலை தருவோம்!-இன்போஸிஸ்
பெங்களூரு: பணி நியமன ஆணை வழங்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயம் வேலை தருவோம் என இன்போஸிஸ் அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 27 ஆயிரம் இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக சம்பளத்தில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளது இன்போஸிஸ் நிறுவனம். ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் வேலையில் சேரவில்லை. பணிநியமன ஆணை வழங்கப்பட்ட வேகத்தைவிட, பணியில் சேர்க்கப்படும் வேகம் மிகமிகக் குறைவாக உள்ளது.
இதுகுறித்து இன்போஸிஸ் துணைத் தலைவர் நந்தன் நீல்கேணியிடம் கேட்கப்பட்டது.
அவர் அளித்த பதில்: இன்போஸிஸ் நிச்சயம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றும். பணிநியமன ஆணை வழங்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயம் வேலை உண்டு. அவர்களது சேர்ப்புத் தேதியில் மட்டும் சிறிது தாமதம் ஏற்படுகிறது. விரைவில் அது சரிசெய்யப்படும்.
அமெரிக்க அரசு எச் 1 பி விசா நடைமுறையில் ஏற்படுத்தியுள்ள பல மாறுதல்கள் சுதந்திரமான வர்த்தகத்துக்கு பெரும் தடைகள்தான். எச் 1 பி விசாக்கள் வழங்குவது கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்பதே உண்மை. பலருக்கு இந்த உண்மை புரியவே இல்லை.
தடையில்லா வர்த்தகம்தான் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த கருத்தை உருவாக்கிய அமெரிக்காவுக்கு இது தெரியாமல் இல்லை. விரைவில் நிலைமை சரியாகும் என நம்புவோம், என்றார்.












Click it and Unblock the Notifications