பாமக: காங்.கின் கடைசி சமரச முயற்சியும் தோல்வி!

திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஆரம்பித்த சாதாரண வார்த்தைப் போர் பெரும் விரிசலாகி தற்போது இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியில் சேர முடியாத அளவுக்கு இறுகிப் போய் விட்டது.
கட்சித் தலைவர்கள் மட்டத்தில் மீண்டும் அணி சேர்ந்து லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற விருப்பம் இருந்தாலும் கூட கட்சித் தொண்டர்கள் மத்தியில் அத்தகைய இணக்கமான போக்கு இல்லை.
இதுதான், டாக்டர் ராமதாஸ், திமுகவுடன் மீண்டும் கூட்டணி சேருவதற்கு தயக்கம் காட்ட முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நடந்ததை மறந்து பாமகவை மீண்டும் அணியில் தக்க வைத்துக் கொள்ள திமுக பச்சைக் கொடி காட்டிய பிறகும் கூட பாமக தரப்பில் தயக்கம் அகலவில்லை. மாறாக, அதிமுக அணியில் சேர வேண்டும் என கட்சிக்குள் குரல் எழும்பவே அந்த வாய்ப்பையும் பரிசீலிக்க ஆரம்பித்ததது பாமக.
பாமகவுக்கு சாதகமாக அதிமுக நடந்து கொள்ளவே இப்போது அதிமுக அணிக்கு பாமக வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
பாமகவை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் கடுமையாக முயன்றனர். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், ராமதாஸை சமாதானப்படுத்த அவரை பலமுறை நேரில் பார்த்துப் பேசினார். அப்படியும் அவர் சமாதானம் ஆகவில்லை.
இந்த நிலையில், கடைசிக் கட்ட முயற்சியாக நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸை, காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், டாக்டர் அன்புமணியை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
பேச்சுவார்த்தையின்போது டாக்டர் அன்புமணியுடன், அவரது மாமனாரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி, மாநிலத் தலைவர் தங்கபாலு ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் அன்புமணி, தனது கட்சியின் நிலையை காங்கிரஸுக்கு உறுதியாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளார்.
அன்புமணி கூறுகையில், எங்களுக்கு காங்கிரஸுடன் கூட்டணி சேருவதில் எந்தவித ஆட்சேபனையும், தயக்கமும், யோசனையும் இல்லை. ஆனால், 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட வேண்டும்.
ஆனால் இரு கட்சிகளையும் (திமுக, பாமக) சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் முன்பு போல இணக்கமான, நட்புறவு இல்லை. கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை மறக்க இரு கட்சித் தொண்டர்களும் தயாராக இல்லை.
இந்த நிலையில் நாம் அணி சேர்ந்தால் அதனால் பலன்களுக்குப் பதில் பாதகங்களே அதிகமாக இருக்கும். தொண்டர்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் கூடுதல் இடங்கள் கிடைத்தால் தான் அதைச் சொல்லி சமாதானப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார் அன்புமணி.
ஆனால், 7 சீட் என்பதை திமுக ஏற்காதே என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாகத் தெரிகிறது. மேலும் மீண்டும் ஒருமுறை ராஜ்யசபா சீட் தரவும் முதல்வர் கருணாநிதி தயாராக இல்லை என்று காங்கிரஸ் தரப்பு கூறவே, அப்படியானால் கூட்டணி சரிப்படாது என்று அன்புமணி கூறியதாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இறுதியில் எந்தவித முடிவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அன்புமணி, கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.
அதிமுக-பாமக கூட்டணி ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, அது வதந்தி என்ற அன்புமணி, நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில்தான் தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில், எல்லாம் நல்ல முறையில் நடைபெறும் என்று நம்புகிறோம். பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் பிரச்சினை எதுவும் இல்லை. அதே நேரத்தில் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று பாமகவை நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. தங்கள் கட்சியின் பொதுக்குழுவில் கூட்டணி பற்றி முடிவு செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு எடுக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு என்றார் பேச்சு தோல்வியடைந்ததை மறைக்க முயன்றபடி.
இதற்கிடையே சோனியா காந்தியுடனும் அன்புமணி நேரடியாக பேச்சு நடத்தியதாகவும் அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து இரு இடங்களை பாமகவுக்குத் தந்து கூட்டணியில் நீடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனைகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
ஆனால், கூட்டணியில் ராமதாஸே வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டது. இதனால் காங்கிரஸ் தனது தொகுதிகளை விட்டுத் தரக் கூட திமுக சம்மதிக்குமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications