For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமா கூட்டணி மாற வேண்டும்-தமிழ் படைப்பாளிகள்

By Sridhar L
Google Oneindia Tamil News

TCWA
டொராண்டோ: விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திமுகவுடனான தனது கூட்டணி முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கனடாவிலிருந்து இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:

அதிமுகவுடன் கூட்டணி சேருவது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம். திமுக கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் எந்தக் கூட்டணியோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வது அல்லது வைததுக் கொள்வதில்லை என்பது அவரது விருப்பம்.

ஆனால் அதிமுகவுடன் கூட்டணி சேருவது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என அவர் சொல்வதை நாம் ஒப்பமாட்டோம். ஜெயலலிதா நேற்றுவரை எமது போராட்டத்துக்கு எதிராக இருந்தவர் என்பது உண்மைதான்.

"இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராகப் பேசியவர் ஜெயலலிதா. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும், விடுதலைப் புலிகள் சரண் அடைய வேண்டும் என்று தமிழ் ஈழத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிராகப் பேசியவர் ஜெயலலிதா" என்கிறார் திருமாவளவன். அது உண்மைதான். ஆனால் அவர் பேசியது போன்றுதானே காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?.

எமது தலைவர் ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம். பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று வீராவேசமாகப் பேசிக்கொண்டும் அறிக்கை விட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்? அது மட்டுமல்ல திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு குன்றுமணி அளவு கூட வித்தியாசம் இல்லை என்று கருணாநிதி பேசிகிறார்.

அப்படியென்றால் திருமாவளவன் எந்த முகத்தோடு திமுக- காங்கிரஸ் கூட்டணியோடு நிற்கிறார்?

காங்கிரஸ் கட்சிக்காரர்கள் திருமாவளவனைக் கைது செய்யுமாறு சட்ட மன்றத்துக்கு உள்ளேயும் சட்டமன்றத்துக்கு வெளியேயும் பேசியதையும் திருமாவளவன் வசதியாக மறந்துவிட்டார்.

அத்தோடு பொதுக்கூட்டங்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோரை திமுக ஆட்சி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருப்பதையும் திருமாவளவன் மறந்துவிட்டார். இது எமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

ஜெயலலிதா, இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராகப் பேசியவர், தமிழ் ஈழத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராகப்
பேசியதோடு தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ, சீமான், அமீர், பாரதிராசா போன்ற தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்யும்படி அறிக்கை விட்டவர் என்பதும் உண்மைதான். ஆனால் இப்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழ் மக்கள் குண்டு போட்டுக் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறார். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அதன் கீழ் அவர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கையில் தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

ஆனால் திமுகவின் நிலை என்ன? வன்னி மக்கள் இன்று வகை தொகையின்றி நூற்றுக் கணக்கில் நாள்தோறும் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் கொட்டிய குருதியால் வன்னி மண் செம்மண்ணாகிவிட்டது. பசியால் மெலிந்து பட்டினியால் வாடி, நோயினால் மெலிந்து சொல்லொணா அவலங்களுக்கும் அல்லல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கொல்லப்படுவதற்கும் அல்லல்படுவதற்கும் அவலப்படுவதற்கும் மத்தியிலுள்ள திமுக ஆதரவு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்! இது சிறு பிள்ளைக்கும் நன்கு தெரியும்.

இந்தியாவே இலங்கைக்கு ஆயுதங்கள், ராடார்கள், பயிற்சி, புலனாய்வு, கடன் கொடுத்து புலிகளுக்கு எதிரான போரைப் பின்னால் இருந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் உதவியின்றி இலங்கைப் படைகள் புலிகளை வென்றிருக்க முடியாது என அந் நாட்டு அமைச்சர்கள் பகிரங்கமாக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அதனை நிறுத்துமாறு ஐ.நாவும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கேட்கின்றன. ஆனால் இந்தியா போரை நிறுத்துமாறு இதுவரை சிங்கள-பவுத்த இனவாத அரசைக் கேட்கவில்லை. கேட்கவில்லை என்பதையும் இலங்கை அமைச்சர்களே சொல்கிறார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வருவதை விரும்பவில்லை. அப்படி வந்தால் நிலைமை இப்போது இருப்பதைவிட மோசமாகும்.

எனவே தேர்தல் அரசியலுக்காக திருமாவளவன் திமுக-காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து விட்டார் என்பதே உண்மையாகும்.

ஜெயலலிதா தமிழர்களின் எதிரியாக இருக்கலாம். ஆனால் கருணாநிதி பதவி ஆசை காரணமாக தமிழர்களுக்குத் துரோகம் செய்துவிட்டார். எதிரி நெஞ்சில் குத்துவான். துரோகி முதுகில் குத்துவான். அதாவது எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உளப் பூர்வமாக ஆதரிக்கும் பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம் போன்ற அமைப்புக்கள் ஒரே அணியில் நிற்க வேண்டும் என்பதே எமது பெரு விருப்பாகும்.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது மருத்துவர் இராமதாசின் பாமக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர முடிவு எடுத்துவிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. அதனை நாம் வரவேற்கிறோம். இதன் பின்னரேனும் திருமாவளவன் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்மீது வைத்திருக்கும் பெரு மதிப்புக் காரணமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறோம்.

முதலில் தமிழ் மக்களது பொது எதிரியான- தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்ற- திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தேர்தலில் தோல்வி அடையச் செய்வோம். மிகுதியைப் பின்னர் பார்ப்போம் என்று கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X