எல்லோருமாக சேர்ந்து தண்டிக்கிறீர்கள்-மேனகா
பிலிபித்: தனது வாழ்நாளிலேயே முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, சிறை வாழ்க்கை பழக்கப்பட்டு வராததால், முதல் நாள் இரவு தூக்கமின்றி தவித்துள்ளார்.
சனிக்கிழமை மாலை பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் கோர்ட்டில் சரணடைந்தார் வருண் காந்தி. அவரை திங்கள்கிழமை வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து பிலிபித் மத்திய சிறைக்கு அவர்க கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
சிறைக்குள் கொண்டு வரப்பட்ட அவர் பல மணி நேரத்திற்கு சிறைக் கண்காணிப்பாளரின் அறையிலியே இருந்தார். பின்னர் அவரை தனி அறையில் அடைத்தனர்.
இரவு பத்து மணியளவில் அவரது தாயார் மேனகா காந்தி சாப்பாடு அனுப்பியிருந்தார். அந்த சாப்பாட்டை சாப்பிட்டார் வருண். பின்னர் தூங்க முயற்சித்தார்.
ஆனால் சிறை வாழ்க்கை புதிது என்பதால் தூக்கம் வராமல் தவித்துள்ளார். விடிய விடிய அவருக்கு தூக்கமே வரவில்லை. இதனால் அதிகாலை 3 மணிக்கு சில புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் மெதுவாக தூக்கம் வரவே, சிறிது நேரம் தூங்கினார்.
வருண் காந்திக்கு சிறையில் சாதாரண வசதிகளே தரப்பட்டுள்ளன. வி.ஐ.பி. மரியாதை எல்லாம் தரப்படவில்லையாம்.
அவருக்கு தற்போது வழங்கப்படும் ஒரே சலுகை, கோர்ட் அனுமதித்துள்ள வீட்டு சாப்பாடு மட்டுமே.
இந்த நிலையில், வருண் காந்தியை இன்று காலை மேனகா காந்தி சிறையில் சென்று சந்தித்துப் பேசினார்.
அவருடன், பாஜக தலைவர் சந்தோஷ் கங்க்வாரும் உடன் சென்றிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேனகா காந்தி பேசுகையில், இது அரசியல் சதி. அற்பத்தனமாக இருக்கிறது. அவன் ஒன்றும் கிரிமினல் அல்ல. அவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.
முன்னதாக நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு மேனகா காந்தி அளித்த ஒரு பேட்டியில், சில லாபங்களுக்காக எனது மகனைத் தண்டிக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். வருண் மீது போடப்பட்டுள்ள புதிய வழக்குகள் கண்டனத்துக்குரியவை.
உண்மை என்று மக்கள் நம்பும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினால் இவ்வளவு தண்டனையா என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு தற்போதைய நிகழ்வுகள் உள்ளன.
தீவிரவாதத்தால் நாம் 35 ஆயிரம் பேருக்கும் மேல் இழந்து விட்டோம். இன்னொரு 35 ஆயிரம் பேரை நாம் இழக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்களா?.
மும்பையில் சமீபத்தில் பலர் உயிரிழந்தனர். காஷ்மீரில் தினசரி தாக்குதல் நடக்கிறது. இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை நமது நாட்டில் உலவ விடக் கூடாது, அனுமதிக்கக் கூடாது என்று கூறினால் அது தவறா?. அப்படிக் கூறுவது மதவாதமா?.
நான் மதவாதப் பெண் அல்ல. அந்த அர்த்தத்திலும் நான் எதுவும் பேசவில்லை. பத்திரிகைகள்தான் எனது மகன் விஷயத்தை பெரிதாக்கி விட்டன. நமது இதயத்திற்கு உண்மை என்று தெரிந்த ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசிய ஒரு பையனை எல்லோருமாக சேர்ந்து தண்டிக்கிறீர்கள் என்றார் மேனகா காந்தி.












Click it and Unblock the Notifications