சேலம்: மருந்து திருடிய ஊழியர்-டாக்டருக்கு மெமோ
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் மருந்துகளை திருட முயன்ற ஊழியர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருந்து எழுதி கொடுத்த டாக்டருக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் டாக்டராக சீதாபதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மருத்துவமனை ஊழியர் சுப்பிரமணியம் என்பவரிடம் 615 மாத்திரை சீ்ட்டுக்களை கொடுத்து மருந்து வாங்கி வரச் சொல்லி உள்ளார்.
அவரும் அந்த சீட்டுகளுடன் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்து கிடங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ஆய்வுக்கு வந்த டீன் சண்முகத்துக்கு, சுப்பிரமணியம் கொத்து கொத்தான மாத்திரை சீட்டுகளுடன் நிற்பதை பார்த்து சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து டீன் சுப்பிரமணியத்தை அழைத்து விசாரித்தார். அப்போது அவர் மயக்கவியல் டாக்டர் வாங்கி வரச் சொன்னதாக கூறினார்.
ஒரே சமயத்தில் இவ்வளவு மாத்திரைகள் தேவைப்படாது என்பதால் இது வெளியில் விற்பனைக்காக கடத்தப்பட இருக்கிறதா என்ற சந்தேகம் டீனுக்கு வந்தது. இதையடுத்து மருத்துவ அதிகாரி டாக்டர் சின்னப்பனை இது குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
அப்போது தேவைக்கு அதிப்படியான மாத்திரைகள் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து டீன் மருத்துவ ஊழியர் சுப்பிரமணியத்தை சஸ்பென்ட் செய்தார். மயக்கவியல் டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications