வேலூர் தொகுதியில் மீண்டும் காதர் மொய்தீன் போட்டி - ஏணியில் நிற்கிறார்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் வேலூர் தொகுதியில் கடந்த முறை காதர் மொய்தீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் வேலூர் தொகுதியை அக்கட்சிக்கு, திமுக ஒதுக்கியுள்ளது. மறுபடியும் காதர் மொய்தீனே இத்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இதுதொடர்பான முடிவை, சென்னையில் நேற்று நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக எடுத்தது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் பேசுகையில், கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள் கட்சியை தி.மு.க.வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன.
எனவே இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் இந்த முறை 'ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
தி.மு.க. காங். தேர்தல் அறிக்கைகளில் முஸ்லிம்கள் இதுவரை கேட்டு வந்த பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கை எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை போலவே உள்ளது.
40 தொகுதிகளிலும் வெல்வோம்..
தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மூன்றாவது நான்காவது அணி என்பதெல்லாம் இல்லாத ஊருக்கு செல்லாத வழிகாட்டுவது போன்றது. மீண்டும் மன்மோகன் தான் பிரதமராக வருவார் என்றார் காதர் மொய்தீன்.












Click it and Unblock the Notifications