சமாஜ்வாடியிலிருந்து விலக போவதாக அமர் மிரட்டல்
லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அஸம் கானுக்கு கட்சித் தலைவர் முலாயம் சிங் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் கடுப்பாகியுள்ளார் அமர்சிங். நான் தேவையில்லை என்றால் விலகிக் கொள்கிறேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு சுப்ரமணிய சாமி போல வடக்கில் அமர்சிங். கூட்டணி சேர்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, மீடியேட்டராக செயல்படுவது என ஏகப்பட்ட வேலைகளைச் செய்து வருபவர் அமர்சிங். சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
அவரைப் போலவே சமாஜ்வாடி கட்சியில் பொதுச் செயலாளராக இருப்பவர் அஸம் கான்.
அவருக்கு முலாயம் சிங் யாதவ் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்செட் ஆனார் அமர்சிங். இந்த நிலையில்தான் ராம்பூர் தொகுதியில், ஜெயப் பிரதாவுக்கு சீட் கொடுக்க அஸம் கான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜெயப்பிரதாவுக்கு சீட் இல்லையா என்று கடுப்பாகி விட்டார் அமர்சிங். இதுதொடர்பாக செய்தியாளர்கள் அமர்சிங்கிடம் கேட்டபோது, எனக்கு அங்கு இடமில்லை என்று தெரிந்தால் முலாயம் சிங்கிடம் குட்பை சொல்லி விட்டு போய்க் கொண்டே இருப்பேன்.
நான் இல்லாமல் சமாஜ்வாடியால் இருக்க முடியும். ஆனால் அஸம் கான் இல்லாமல் இருக்க முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று கோபத்துடன் கூறினார்.
இதனால் சமாஜ்வாடி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு உ.பியில் அஸம்கானுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அவரது சொந்த மாவட்டம்தான் ராம்பூர். கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் ஜெயப்பிரதாவுக்கு சீட் கொடுத்ததையே கடுமையாக எதிர்த்தவர் அஸம்கான்.
ஆனால் அமர்சிங் போட்டு அனத்தியதால், ஜெயப்பிரதாவுக்கு சீட் கொடுத்தார் முலாயம் சிங். இந்த முறையும் அமர்சிங்கை வைத்து சீட் வாங்க ஜெயப்பிரதா முயன்றதால் கடுப்பான அஸம் கான் வெளிப்படையாகவே தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதுதான் அமரை கோபப்படுத்தி விட்டதாம்.
இந்த நிலையில் தனக்கும் முலாயம் சிங் யாதவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை, கட்சியிலும் பிரச்சினை இல்லை என்று தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு கூறியுள்ளார் அமர்சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னால் இந்த உலகத்தை விட்டு போக முடியும். ஆனால் கட்சியை விட்டுப் போக முடியாது.
ஜெயப்பிரதாவுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது.
முலாயம் சிங் யாதவ் எனது குரு. அவருடன் மோதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கும் முலாயமுக்கும் இடையிலான உறவு வலுவானது. யாராலும் அதை உடைக்க முடியாது என்றார் அமர்சிங்.
ஆனால் அஸம் கான் வேகமாக வளருவதைப் பார்த்தால் அந்த உறவு வேகமாக உடையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக உ.பி. வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications