For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதாகிறார் லாலு பிரசாத் யாதவ்!-பைலட் கைது!!

By Staff
Google Oneindia Tamil News

Lalu Prasad Yadav
லக்னோ: பாஜக வேட்பாளர் வருண் காந்தியை ரோடு ரோலரில் போட்டு நசுக்கியிருப்பேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள லாலு பிரசாத் யாதவை கைது செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் சரணடையாவிட்டால் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் என்ற இடத்தில் பேசிய லாலு, நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், முஸ்லீம்களை அவதூறாகப் பேசிய வருண் காந்தியை ரோடு ரோலரில் போட்டு நசுக்கியிருப்பேன் என்று பேசியிருந்தார்.

இந்த வன்முறை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பெராக் அகமது நடவடிக்கையில் இறங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், லாலு பிரசாத் பேச்சு அடங்கிய சி.டி.யை நான் போட்டுப் பார்த்தேன். சமுதாயத்தில் பிளவு உண்டாக்கி மத கலவரத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

லாலுவின் பேச்சு அடங்கிய சி.டி. தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.

மேலும், கிஷன்கஞ்ச் நகர போலீஸ் நிலையத்தில் லாலு பிரசாத் மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. வெறித்தனமாக கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் பேசியதாக இந்தியதண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) 153 வது பிரிவின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 வது பிரிவின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

எப்.ஐ,ஆர். பதிவு செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து லாலுவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர் சரண் அடைய மறுத்தாலோ, அல்லது ஜாமீன் பெறவில்லை என்றாலோ கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லாலுவை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக இன்னொரு தகவல் கூறுகிறது.

சிடியை கேட்கும் தேர்தல் ஆணையம்..

இது குறித்து துணை தேர்தல் ஆணையர் ஆர். பாலகிருஷ்ணன் கூறுகையில், லாலுவின் பேச்சு அடங்கிய சி.டி.யை அனுப்புமாறு மாநில தலைமை தேர்தல் கமிஷனர் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு இருப்பதால் உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - பாஜக

இதற்கிடையே, லாலு பிரசாத் யாதவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக கோரியுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜெட்லி வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லாலு பிரசாத்தை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் இரட்டை நிலையை கையாளக் கூடாது. வருண் காந்தி விஷயத்தில் எடுத்த அதே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

ப.சிதம்பரமும் கண்டனம்...

லாலுவின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லாலுவின் பேச்சு படித்தவர் பேச்சு போல் இல்லை. சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.

காங்கிரஸ் கட்சியும் லாலுவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்வின் குமார் கூறுகையில், லாலுவின் பேச்சு ஜனநாயக பாரம்பரியத்துக்கும், கண்ணியத்துக்கும் எதிரானது என்றார்.

பைலட் கைது..

இந்த நிலையில் லாலு மீது மேலும் ஒரு எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கார்வாவுக்கு பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்ற லாலு பிரசாத், பொது கூட்ட மேடைக்கு அருகே ஹெலிகாப்டரை தரையிறக்க பைலட்டை கேட்டு கொண்டார். பைலட்டும் அங்கே தரையிறக்கினார்.

ஹெலிகாப்டர் தளத்தை தவிர வேறு எங்கும் ஹெலிகாப்டரை நிறுத்த அனுமதியில்லை. அதனால், தேர்தல் நடத்தை விதிகளை லாலு மீறிவிட்டார் என்று தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க புகார் செய்தது.

அதன் பேரில் கார்வா போலீஸ் நிலையத்தில் லாலு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பைலட் ஜகதீஷ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அடுத்தடுத்து இரு எப்.ஐ.ஆர். ஒரு மத்திய அமைச்சரின் மீது தொடரப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

லாலு புது விளக்கம்..

இதற்கிடையே, வருண் காந்தியை ரோடு ரோலரில் போட்டு நசக்குவேன் என நான் கூறவில்லை. சட்டம் என்ற ரோலரில் போட்டு வருணை நசுக்குவேன் என்றுதான் பேசினேன் என்று புது விளக்கம் அளித்துள்ளார் லாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X