ஈழ தமிழர்களை காக்க கோரி திமுக பிரமாண்ட பேரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் இனத்தைக் காக்கக் கோரி திமுக சார்பில் இன்று மாலை பிரமாண்ட பேரணி நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையேற்று பேரணியத் தொடங்கி வைத்தார்.

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து, அப்பாவித் தமிழர்களைக் காக்கக் கோரி, இலங்கை அரசே போரை நிறுத்து என்ற பெயரில், திமுக சார்பில் இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இதையொட்டி மன்றோ சிலை அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் அணிவகுத்தனர். பின்னர் அங்கு முதல்வர் கருணாநிதி வருகை தந்தார். பின்னர் அவர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்து தலைமை தாங்கி வாகனத்தில் முன் சென்றார்.

பேரணி சேப்பாக்கத்தில் முடிவடைந்தது. திமுகவினர் தவிர பெரும் திரளான காங்கிரஸாரும் பேரணியில் பங்கேற்றனர்.

முன்னதாக இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

இலங்கை தமிழர்களின் பிரச்சினை ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தபோதிலும் அண்மைக் காலமாக மிகவும் மோசமான நிலைமை உருவாகியுள்ளது. 23-4-2008 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. உறுப்பினர்களும், ம.தி.மு.க. சார்பாக மு.கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் சார்பாக கு.செல்வம், து. ரவிக்குமார் ஆகியோரும் விதி 36-ன் கீழ் ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றைக் கொடுத்து-அதனைத் தகவல் கோரல் என்ற முறையில் பேரவைத் தலைவர் அனுமதித்து-அவர்கள் எல்லாம் பேசிய பிறகு-அரசின் சார்பில் நானே அவர்களின் கருத்துகளை உள்ளடக்கி ஒரு தீர்மானத்தை அவையில் முன் மொழிந்தேன்.

அடுத்து 6-10-2008 அன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அனைத்து கட்சிகளின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தமிழர்களுக்காக இயக்கம் நடத்துகிற அனைவரும், தமிழர்கள் அனைவரும் ஒரே உருவில் ஒரே வடிவில் ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

அதற்கு முதல் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமருக்கும், சோனியாகாந்திக்கும் அனுப்பி வைத்ததின் அடிப்படையில்- பிரதமர் நம்முடைய கழக அமைச்சர் டி.ஆர்.பாலுவை 6-ந் தேதி காலையில் அழைத்துப்பேசி விவரங்களையெல்லாம் கேட்டதோடு என்னிடமும் தொலைபேசியிலே தொடர்பு கொண்டார். அவரிடம் நான் புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களைக் கொல்வது குறித்து இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்- இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும்- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பங்களுக்கும் இனி ஆளாகவே கூடாது என்றெல்லாம் கேட்டுக்கொண்டேன். அவரும் அக்கறையுடனும், கவலையுடனும் என் பேச்சைக் கேட்டு, உடனடியாக கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்றார்.

கூறியது மாத்திரமல்ல, உடனடியாக இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை நாட்டுத் தூதரை வரச் சொல்லி, அவரை எச்சரித்து இப்படி தமிழகத்திலே இருந்து அபயக் குரல் வந்திருக்கிறது, நீங்கள் எங்களுடைய கருத்தை அறிந்து ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டுமென்ற எச்சரிக்கையை இந்திய அரசு அன்றைக்கே செய்தது.

இதனைத் தொடர்ந்து 14-10-2008 அன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை தலைமைச் செயலகத்திலே கூட்டி இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தோம். அந்த கூட்டத்தை அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் புறக்கணித்தன. தே.மு.தி.க.வும் கலந்து கொள்ளவில்லை.

அதைத் தொடர்ந்து 16-10-2008 அன்று மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் "இலங்கையில் நிலவும் சூழ்நிலை இந்தியாவில் உள்ள எங்களுக்கு பெரிதும் கவலை அளிக்கிறது. ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர முடியாது என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்'' என்று கூறினார்.

தொடர்ந்து 18-10-2008 அன்று நமது பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நேரடியாகவே பேசினார். அடுத்து 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் நாடாளுமன்றத்தில் "இலங்கையின் வடக்கு பகுதியில் மனிதாபிமான சூழல்கள் மிகவும் மோசமாகிக் கொண்டு வருகின்றன.

எந்த நிலையிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை நாம் வலியுறுத்தியுள்ளோம். இனப்பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்'' என்று கூறினார்.

24-10-2008 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதுவரை நடைபெறாத அளவிற்கு பிரமாண்டமான "மனித சங்கிலி'' ஒன்றினை நடத்தினோம். திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சென்று பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தியதோடு- 1-11-2008 அன்று சென்னையில் உண்ணா நோன்பும் இருந்தார்கள். அதே நவம்பர் திங்கள் 12-ந் தேதி மீண்டும் ஒரு முறை இலங்கை தமிழர்களுக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன் மொழிந்து நிறைவேற்றப்பட்டது.

4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து வேண்டுகோள் விடுத்ததுடன், மத்திய அமைச்சர் பிரணாப்பை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டோம்.

27-12-2008 அன்று நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிலும் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம். 12-1-2009 அன்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசு, தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் என்னைச் சந்தித்து உடனடியாக பிரணாப்பை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அவ்வாறே நான் மத்திய அமைச்சர் தம்பி பாலுவிடமும், என் மகள் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடமும் கூறி, அவர்களும் முறையே பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து நிலைமைகளை விளக்கினார்கள்.

இதற்கிடையே தமிழக அரசின் சார்பில் இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக நிதி ஒன்றும் திரட்டப்பட்டு அதிலே சுமார் ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்து- அந்த தொகையிலிருந்து உணவு பண்டங்கள், துணிகள், மருந்து பொருள்களை மத்திய அரசின் உதவியோடு செஞ்சிலுவை சங்கங்களின் மூலமாக வழங்கியிருக்கிறோம். அந்த உதவிகள் முறையாக போய்ச் சேர்ந்ததாக நமக்கு தகவல்களும் கிடைத்தன.

இலங்கை அரசு 48 மணி நேரத்திற்கு தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்ய முன் வந்ததே தவிர- நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வரவில்லை. அதுவும் இரண்டு நாட்களாக வந்துள்ள செய்திகள் நம்மை மிகவும் பாதித்துள்ளது.

ஏப்ரல் 9-ம் நாள் மாலை 4 மணிக்கு சென்னையில் மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரையில் என்னுடைய தலைமையில் இலங்கை அரசை போரை நிறுத்தும்படி கோரி மாபெரும் தமிழர் பேரணி ஒன்றினை கட்சி வேறுபாடின்றி நடத்திட முடிவு செய்து, அது பற்றிய விளம்பரங்கள் வெளிவந்துள்ளன.

தற்போது கடந்த ஓராண்டு காலமாக இலங்கை தமிழர்கள் மாண்டு மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்காக தாய்த் தமிழகம் தொடர்ந்து மத்திய அரசின் உதவியோடு பல வகைகளிலும் குரல் கொடுத்து வருகிறது.

அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரவையிலே கண்டன தீர்மானங்கள், பிரதமரிடம் சந்திப்பு, முறையீடு மனுக்கள், மகஜர்கள் தற்போது பேரணி அறிவித்திருக்கிறோம். இலங்கை தமிழனுக்காக நமது நலனைத் துச்சமாக கருதி, நம்மையே வருத்திக்கொண்டு - அறப்போரில் ஈடுபடுவதே நமக்கு இருக்கும் ஒரே வழி என்று கருணாநிதி கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+