மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. விருதுநகர் - வைகோ
2. ஈரோடு - அ.கணேசமூர்த்தி
3. தஞ்சாவூர் -துரை.பாலகிருஷ்ணன்
4. நீலகிரி (தனி) - டாக்டர் சி.கிருஷ்ணன் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களில் கிருஷ்ணன் ஏற்கனவே பொள்ளாச்சி தொகுதியில் வென்று எம்பியானர். இவருக்காக அந்தத் தொகுதியை வைகோ கேட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தர மறுத்துவிட்டார். இதையடுத்து கிருஷ்ணனை நீலகிரி தனி தொகுதிக்கு மாறியுள்ளார் வைகோ.
வைகோவை அழைக்காத ஜெ.!:
முன்னதாக மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைகோவை ஜெயலலிதா நேரில் அழைக்கவில்லை. மாறாக ஒருவர் மூலம் கொடுத்து அனுப்பினார். வைகோவும், கையெழுத்தைப் போட்டு மாவட்டச் செயலாளர் ஒருவர் மூலம் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், இருவரும் கையெழுத்திட்டதாக 'மொட்டையாக' அதிமுக தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. இதனால் ஜெயலலிதாவை வைகோ சந்தித்து கையெழுத்திட்டதாக நேற்று அனைத்து பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன.
ஆனால், விசாரித்தபோது வைகோவை ஜெயலலிதா சந்திக்கவே இல்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த 15 நாட்ளாக நிலவி வந்த கடும் இழுபறிக்குப் பின்னர் ஒரு வழியாக நேற்று மதிமுகவுக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவித்தார் ஜெயலலிதா.
ஆனால், அதன் பின்னணியில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. வைகோவை பேச்சுவார்த்தை அழைத்தும் அவர் வராததால் தொகுதிப் பட்டியலை இருவர் மூலம் நேற்று முன் தினம் இரவு வைகோவுக்கு அனுப்பினார்.
அப்போது வைகோ தனது பொதுக் குழுக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். இரவு 11 மணிக்கு வைகோவை சந்திக்கச் சென்ற அதிமுக தூதர்கள் இருவரும் வைகோவின் இல்லத்தில் காத்திருந்தனர்.
ஆனால் உள்ளே கூட்டம் நடந்ததால் அவர்கள் அழைக்கப்படவில்லை. மேலும் தனது செல்போனையும் கூட்டத்தில் இருந்தவர்களின் செல்போனையும் ஆப் செய்யச் சொல்லிவிட்டார் வைகோ. இதனால் அவருடன் அதிமுக தூதர்கள் பேசக் கூட முடியவில்லையாம்.
அதிகாலை 3 மணிக்குத் தான் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தார் வைகோ. அதன் பின்னர் தான் அவரை அதிமுக தூதர்களால் சந்திக்க முடிந்துள்ளது.
அவர்கள் தந்த ஒப்பந்ததை வாங்கிக் கொண்ட வைகோ பின்னர் அதில் கையெழுத்திட்டு அதை தனது கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவர் மூலம் போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தார். நேரில் போகவில்லை.
பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்போது அந்தக் கட்சிகளின் தலைவர்கள் போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவை நேரில் பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுச் சென்றனர்.
ஆனால் மதிமுக விஷயத்தில் ஒப்பந்தமே நேரில் சந்திக்காமல் ஏற்பட்டுள்ளது.
கேட்ட தொகுதி கிடைத்துள்ளது...வைகோ:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய வைகோவிடம், நீங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்ததா என்று கேட்டதற்கு, எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளது என்றார்.
இலங்கை பிரச்சினையில் அதிமுகவின் நிலைப்பாடு வேறுமாதிரியாக உள்ளதே என்று கேட்டதற்கு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனி கோட்பாடுகள் உள்ளன. எங்கள் கட்சிக்கும் தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. அதே போல் அதிமுகவுக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். எங்கள் கருத்தை நாங்கள் திணிக்க மாட்டோம். இலங்கை பிரச்சினையில் எங்களுடைய கருத்தால் கூட்டணியில் எந்த உரசலும் இல்லை.
17ம் தேதி காலை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். 16ம் தேதி நடைபெறும் வேட்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைத்திருக்கிறார். நானும் 4 வேட்பாளர்களும் அதில் கலந்து கொள்கிறோம்.
திமுக தலைவருடைய முயற்சியால் ஓரிருவர் இந்த இயக்கத்திலே இருந்து விலகி சென்றதால், கழகம் கலகலத்துவிட்டது என்று ஒரு பிரசாரத்தை ஆளுங்கட்சியினர் செய்து பார்த்தார்கள். ஆனால், லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கமான மதிமுகவை யாரும் சிதைக்க முடியாது. கட்சியை விட்டு சென்றவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அங்கு அவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்றார்.












Click it and Unblock the Notifications