போரால் பெரும் துயரில் ஈழத் தமிழர்கள்-மேனன்
டெல்லி: 23 ஆண்டு காலமாக நீடித்து வரும் இனப் போரால், இலங்கைத் தமிழ் சமுதாயம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. அதை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் கூறியுள்ளார்.
அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் 23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால், தமிழச் சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
அதை மீட்டு, மீண்டும் அங்கு இயல்பு நிலை திரும்பவும், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை நான் சந்தித்தபோது இதுகுறித்துதான் முக்கியமாக விவாதித்தோம்.
இலங்கை நிலவரம் மற்றும் அங்குள்ள அப்பாவி மக்களின் துயரம் குறித்து ஹில்லாரி கிளிண்டன் கேட்டறிந்தார். நம்மால் என்ன செய்ய முடியும் எனவும் கேட்டார். அதற்கு நான் நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யலாம் என்றேன்.
தற்போது இந்தியாவின் சார்பில் அங்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். போர்க்களத்திலிருந்து தப்பி வரும் மக்களுக்குத் தேவையானதை செய்து வருகிறோம்.
அப்பகுதி மக்களுக்கு மறு வாழ்வுக்கான தேவைகளை செய்து வருகிறோம். இதன் மூலம் வடக்கு இலங்கையில் தமிழ் மக்கள் விரைவில் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால் தமிழ் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். அது அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது என்றார் மேனன்.
இன்று தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
இதற்கிடையே, மேனனை இன்று வி.எஸ்.சம்பந்தன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.












Click it and Unblock the Notifications