மதுரை சிபிஎம் எம்எல்ஏ நன்மாறன் மீது பயங்கர தாக்குதல்-படுகாயம்
மதுரை: மதுரை கிழக்குத் தொகுதி சிபிஎம் எம்.எல்.ஏ. நன்மாறன் நேற்று பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டார். அவரது கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக-தோழமைக் கட்சிகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளராக பொ.மோகன் போட்டியிடுகிறார்.
இவரின் வெற்றிக்காக தோழமைக்கட்சியினரோடு மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் , கட்சிப்பணியாற்றி விட்டு புதனன்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், நன்மாறன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். மயிரிழையில் அவர் உயிர்தப்பினார். ஆனாலும் அவர் கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.
இந்த கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர், சபாநாயகர், சட்டசபை செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாநகர் காவல்துறை ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வரதராஜன் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வரதராஜன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பொ.மோகனை ஆதரித்து நடைபெற்றுவரும் பிரச்சாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, தொடர்ச்சியாக ஆளும் கட்சியினர் நடத்தி வரும் வன் முறை சம்பவங்களின் பின்னணியிலேயே மதுரை கிழக்கு சட்டமன்றப் பேரவை உறுப்பினரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான என்.நன்மாறன் மீதான தாக்குதலும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறைத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக காவல்துறை இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
பொய் வழக்கு புகார்:
இதற்கிடையே மதுரையில் சிபிஎம் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள் மீது மதுரையில் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு ஆட்டோ சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ சம்மேளன பொதுச் செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மோகனுக்காக பணியாற்றிய தெய்வராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது நரிமேடு காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெத்தானியாபுரத்தில் திமுகவினர் தங்கள் தேர்தல் அலுவலகத்தை தாங்களே தீவைத்து எரித்துக் கொண்டு இந்த சம்பவத்தில் சம்பந்தமே இல்லாத அப்பகுதியைச் சேர்ந்த தெய்வராஜ் உள்ளிட்ட ஆறு நபர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார் பொய் என்று தெரிந்தும், திமுகவினர் தூண்டுதலின் பேரில் போலீசார் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.
இவ் விஷயத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உடனடியாக தலையிட்டு பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications