ராஜபக்சேவுடன் ஐ.நா. தூதர் விஜய் நம்பியார் ஆலோசனை
கொழும்பு: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புத் தூதராக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியார், நேற்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வன்னிப் பகுதியில் தொடரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என உலக அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரச்சினை குறித்து விவாதிக்கவும், அப்பாவித் தமிழர்களின் உயிரைக் காப்பது குறித்தும் விவாதிக்க, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், தனது சிறப்புத் தூதராக முன்னாள் இந்தியத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.
கொழும்பு வந்த நம்பியார் முதலில் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். நேற்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார்.
வன்னி நிலவரம் குறித்து ராஜபக்சேவுடன் விஜய் நம்பியார் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான முறையில் வந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குடியேறினால் அவர்களின் மறு வாழ்வுக்கு அரசு என்ன செய்யவுள்ளது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
நம்பியாருடன், அரசியல் விவகாரப் பிரிவைச் சேர்ந்த ஹிட்டோக்கி டென்னும் உடன் இருந்தார்.


Click it and Unblock the Notifications
