மத்தியில் யார் ஆட்சி?-நிர்ணயிக்க போகும் தமிழகம்-ஆந்திரா-உபி

இந்த மூன்று மாநிலங்களிலும் மொத்த எம்.பி. சீட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று மாநிலங்களிலும் பிராந்தியக் கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. இங்கு தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை வலுவிழந்து காணப்படுகின்றன. எனவே இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பிராந்திய கட்சிகளின் ஆதரவு இருக்கும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.
இந்த முறையும் கூட்டணி ஆட்சியே மத்தியில் அமையும். ஆனால் யார் கூட்டணி ஆட்சியை அமைப்பது என்பதை முடிவு செய்யப் போவது இந்த மாநிலங்கள்தான் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி ஆகியவையே அங்கு செல்வாக்குடன் உள்ளன.
உ.பியில், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை. 1989ம் ஆண்டுக்குப் பிறகு உ.பியில் ஒரு முறை கூட காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. பிராந்தியக் கட்சிகளே இங்கு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. பாஜகவும் இங்கு ஆட்சியில் இருந்துள்ளது.
உ.பியில் ஜாதி அரசியல்தான் இன்னும் வலுவாக உள்ளது.
2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இங்கு 9 சீட்கள் கிடைத்தன. பாஜகவுக்கு 10 சீட்கள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி 19 சீட்களில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி கட்சிக்கு அதிகபட்சமாக 35 இடங்கள் கிடைத்தன.
இப்போது உ.பியில் மாயாவதி ஆட்சியில் உள்ளார். கடந்த முறையை விட இந்த முறை அதிக இடங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் மாயாவதியும், பகுஜன் சமாஜும் உள்ளனர்.
தமிழகம்...
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவே பிரதான கட்சிகள்.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கடந்த 2004 தேர்தலில் 39 இடங்களையும் வென்றது. இதில் திமுகவுக்கு 16 இடங்கள் கிடைத்தன.
ஆனால் அதிமுகவுக்கு கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது திமுக கூட்டணி சுருங்கிப் போய் விட்டது. கடந்த முறை அந்தக் கூட்டணியில் இருந்த பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது அதிமுக வசம் உள்ளன.
தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாறியுள்ளார் ஜெயலலிதா. எனவே இது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக மாறும் என கருதப்படுகிறது.
ஆந்திராவில்...
ஆந்திராவைப் பொறுத்தவரையில், அங்கு காங்கிரஸுக்கும், தெலுங்கு தேசத்திற்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் இங்கு கடந்த தேர்தலில் 29 இடங்களில் (மொத்தம் 42) வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் ஐந்தில் மட்டுமே வென்றது.
இம்முறை அதை விட கூடுதலாக வெல்ல முடியும் என நம்பிக்கையில் உள்ளது தெலுங்கு தேசம். காரணம் அது இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவற்றுடன் இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணி.
ஆனால் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம், தமிழகத்தில் விஜயகாந்த், திமுக -அதிமுகவுக்கு வேட்டு வைப்பது போல, ஆந்திராவில் தெலுங்கு தேசம், காங்கிரஸுக்கு ஆப்பு வைக்கும் என நம்பப்படுகிறது.
மொத்தத்தில் உ.பி, தமிழ்நாடு, ஆந்திராவில் யார் அதிக சீட்களைப் பெறுகிறார்களோ, அவர்களது ஆதரவு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களே மத்தியில் ஆட்சியை அமைக்க முடியும்.












Click it and Unblock the Notifications