தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு ரூ. 25 கோடி நிதியுதவி
சென்னை: இலங்கையில் இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு வழங்குவதற்காக ரூ. 7 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை தமிழக அரசு அனுப்பவுள்ளது. மேலும் பிரதமர் அறிவித்த ரூ. 100 கோடி நிதியுதவியுடன் தமிழக அரசும் ரூ. 25 கோடியை வழங்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தற்காலிக முகாம்களுக்கு தற்போது கூடுதலாக இடம் பெயர்ந்து வந்து சேர்ந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்றாம் கட்டமாக ஏறத்தாழ ரூ.7 கோடி மதிப்புடைய மேலும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிப்பங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக அனுப்பப் படும் உணவுப் பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் இம்முறை குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான வில்லைகளும், 10 ஆயிரம் கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களும் சேர்த்து அனுப்பப்படுகின்றன.
இந்த நிவாரணப் பொருள்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வரும் மே மாதம் 5-ந்தேதிக்குள்ளாக சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டு, அங்குள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டியுள்ள நிதியிலிருந்து எஞ்சிய 25 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும்.
இத்தொகை மத்திய அரசு அறிவித்துள்ள ஒதுக்கீடான ரூ. 100 கோடியுடன் சேர்த்து ரூ. 125 கோடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications