போரும் நிற்காது - வன்னிக்கு யாரையும் விட மாட்டோம் - கோத்தபாய கொக்கரிப்பு

இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் பேசுவதற்காகவும், வன்னிப் பகுதிக்கு மனிதாபிமானக் குழுக்களை அனுமதிக்க வேண்டும் என கோருவதற்காகவும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் கொழும்பு வந்திருந்தனர்.
அவர்களிடம் பேசியபோதுதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார் கோத்தபாய.
அவர்களிடம் கோத்தபாய ராஜபக்சே பேசுகையில், முப்பது வருடங்களுக்குப் பிறகு பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தின் பிற தலைவர்களைப் பிடிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க முயன்று வருகிறோம். எனவே இந்த சமயத்தில் போரை நிறுத்தப் போவதில்லை.
புலிகள் இயக்கத்தினரை முழுமையாக பிடிக்கும் வரையிலும், அந்த இயக்கத்தை அழிக்கும் வரையிலும் போர் நிறுத்தம் கிடையவே கிடையாது என்றார் கோத்தபாய.
மேலும் அவர் கூறுகையில், இந்த போரில் பொதுமக்களும், இலங்கை ராணுவ வீரர்களும்தான் பெருமளவில் உயிரிழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எனவேதான் விடுதலைப் புலிகள் அமைப்பை மொத்தமாக அழிக்க அரசு தீர்மானித்தது.
பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தின் பிற தலைவர்களையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்காகத்தான் சில மனிதாபிமான அக்கறை காட்டுவதாகவும் கோத்தபாய குற்றம் சாட்டினார்.
போரை நிறுத்தினால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்று கூடவே அது உதவும் என்றும் கூறிய கோத்தபாய, போரை நிறுத்த வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்யப் போவது ஒரே ஒருவர் மட்டுமே. அவர்தான் அதிபர் ராஜபக்சே. அவர்தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும்.
பிரபாகரனையும், அவரது அமைப்பின் பிற தலைவர்களையும் உயிருடன் பிடியுங்கள் முடியாவிட்டால் மொத்தமாக அழித்து விடுங்கள் என ராஜபக்சே ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி மாதத்திற்குப் பின்னர் இதுவரை 2 லட்சம் மக்களை விடுதலைப் புலிகள் பிடியிலிருந்து ராணுவம் மீட்டுள்ளது. இதற்காக ஒரு முறை கூட துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றாராம்.
அப்போது டேவிட் மிலிபான்ட், ராணுவத்தின் தாக்குதலில் பொதுமக்கள் பெருமளவில் பலியாகி வருவதாக தகவல்கள் வருவது குறித்து கேட்டபோது சற்று கோபமான குரலில், புலிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை அப்படியே ஏற்கக் கூடாது. பிபிசி கூட விடுதலைப் புலிகள் சொல்வதை, உறுதி கூட படுத்தாமல் அப்படியே திரும்பக் கூறுவதாக கூறினாராம்.
மேலும், ஒரு தீவிரவாத அமைப்பு சொல்வதை நம்புவதா அல்லது அரசு அரசின் பொறுப்பான அதிகாரி சொல்வதை நம்புவதா என்பதை இங்கிலாந்து குழுவே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று மிலிபான்ட்டிடம் கூறினாரம் கோத்தபாய.
கிடுக்கிப் பிடி போட்ட கொச்னார்..
டேவிட் மிலிபான்ட்டிடம் இப்படி கடுகடுவென பேசிய கோத்தபயவை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார் சாதுரியமாக பேசி மடக்கப் பார்த்திருக்கிறார்.
வன்னிப் பகுதிக்கு ஐ.நா. மனிதாபிமானக் குழு செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார் கொச்னார். அதற்கு கோத்தபாய,
அந்தப் பகுதியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. யாருடைய பாதுகாப்பையும் அரசால் உறுதிப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட கொச்னார், நான் செல்லத் தயாராக இருக்கிறேன் என்றாராம் அதிரடியாக. இதை எதிர்பாராத கோத்தபாய, சிரித்துக் கொண்டே, விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் விரக்தியடைந்த நிலையில் இருக்கின்றது.
இந்த நிலையில் உங்களை அவர்கள் பிணைக் கைதியாக பிடித்துச் செல்லும வாய்ப்பு உள்ளது என்றாராம்.
ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை. போகத் தயார் என விடாமல் கூறியுள்ளார் கொச்னார்.
அதற்கு கோத்தபாய, விடுதலைப் புலிகள் அமைப்பு உங்களை என்ன செய்யும் என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விடுமே என்ற கவலைதான் எங்களுக்கு என்றாராம்.
இப்படி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அமைச்சர்களிடம் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல், முரட்டுப் பிடிவாதத்துடன் கோத்தபாய பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications