For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: தமிழுக்கு ஏதாவது நேரிட்டால் அதைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

லோக்சபா திமுக தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் தொடங்கினார். இக்கூட்டத்தில் மே தின கொண்டாட்ட கூட்டமும் நடந்தது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பாக முதல்வர் கருணாநிதி பேசுகையில், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்பு பேசிய திருமாவளவன் விட்ட முழக்கம் விரைவில் பாராளுமன்றத்தில் கேட்கும். அவருடன் சேர்த்து சாருபாலா தொண்டைமான் முழக்கமும் கேட்கும்.

மதநல்லிணக்க அரசு அமைய வேண்டும்...

நாடு வளர்ச்சி பெற மத்தியில் மத நல்லிணக்க, மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். டெல்லியிலும், சென்னையிலும் அமைய இருக்கும் அரசு எந்த மதத்தையும் சாராத, எந்த மதத்திற்கும் தனி சலுகைகளை அளிக்காத மதச்சார்பற்ற அரசு அமையும். இந்த கூட்டணியில் மத நல்லிணக்க கட்சிகள் உள்ளன.

இன்று நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. பிப்ரவரி 11ம்நாள் இங்கு வரக்கூடிய அளவுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என்று மருத்துவர்கள் கூறினர். அன்று மருத்துவர்கள் கூடி கலந்தாலோசித்து இரண்டு வழிகள்தான் உள்ளது என்று என்னிடம் கூறினர். முதுகில் ஏற்பட்ட வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு 85 வயதாகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் வெற்றி அல்லது ஆயுள் முடிவுதான் ஏற்படும். இதில் எதை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்று கேட்டனர். குடும்பத்தினர் அழுது புலம்பினர்.

அறுவை சிகிச்சையால் வரும் முடிவுக்கு தயார் என்று கூறினேன். அவை முடிந்து இரண்டு மாத காலம் ஆகியும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன். இன்றும் 3 மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன்.


மருத்துவக் குழுவிலும் மத நல்லிணக்கம்...
அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன்.

இந்த சிகிச்சையை நாட்டின் முன்னேற்றத்துக்கு அளிக்கவும் இதுபோன்ற மதநல்லிணக்கம் வர வேண்டும் என்பது என் ஆசை.

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அண்ணா என்னை நிற்க சொன்னார். அப்போது முதன் முதலாக விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டேன். 1953ல் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறை சென்றேன். அப்போது என்னுடன் முல்லை சக்தி, கஸ்தூரி ராஜா, குமாரவேலு, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட வியாதிதான் இதுவரைடிக்கிறது. என்னை தமிழ் தொண்டனாக ஆக்கியது இந்த திருச்சிதான்.

இருவர் தீக்குளித்து மாண்டனர். சரித்திரம் படைத்தவர்கள் இந்த திருச்சியை சேர்ந்தவர்கள். அன்பில் தர்மலிங்கம், எம்.எஸ்.மணி, அழகுமுத்து காமாட்சி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது காமாட்சியை ஒரு பெண் என தவறாக நினைத்து பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர். அவர் பெயர் காமாட்சி நாதன் என்பது அதன் பிறகு தான் தெரிந்தது.

திருச்சியில் கிடைத்த இணை பிரியாத நண்பர்கள் இப்போது இல்லை. அவர்கள் இல்லாமல் நான் மட்டுமே இருக்கிறேன். தமிழுக்கு ஆபத்து வந்தால் அந்தத் தமிழை காப்பாற்றுவதற்காக இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கருதுகிறேன்.

அறுவைச் சிகிச்சை முடிந்து 2 மாதமாகி விட்டது. டாக்டர்கள் சுற்றுப்பயணம் செய்யக் கூடாது என்றார்கள். ஏன் என்றேன். மீண்டும் கோளாறு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றார்கள். இருப்பது ஒரு உயிர், போகப்போவது ஒரு முறை. அது நல்லதுக்காக நல்லவர்களை காப்பாற்றுவதற்காக போகட்டும் என்று அண்ணா கூறினார். அவர் கூறியபடி என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். குளித்தலையில் இருந்த காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.

இப்போது 85 வயதிலும் சொல்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், உங்கள் சொந்தக்காரன், இந்த மேதினக் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. வாழும் காலத்தில் என்ன பணியாற்றினோம் என்பதுதான் முக்கியம். தமிழ் இனத்தை வளர்த்தவர்களை மறக்க மாட்டேன்.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருக்குவளை என்ற ஊரில் பிறந்தவன். எனது தந்தை என்னை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். நான் உங்களுக்கு வேலைக்காரனாகவும், பணியாளனாகவும், தொண்டனாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

13 வயதில் எழுத ஆரம்பித்தேன். பரிணாம வளர்ச்சியில் திராவிட நாடு திராவிடர்க்கே என்று எழுதினேன். அண்ணா இதைக் கவனித்து, உனது இளமைக் காலத்தை வீணாக்கிக் கொள்ளாதே, ஒழுங்காகப் படி என்று சொன்னார். அவர் படியென்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழுக்காக உழைத்தேன். பாளை சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது, அண்ணா, தன்னை வென்றார் தரணியை வெல்வார் என்று என்னைப் பற்றி எழுதினார்.

நான் இன்று உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைக் காண அண்ணா இங்கு இல்லை. அவர் இருந்திருந்தால் அறப்போர் வழியை மேலும் எனக்கு வகுத்துத் தந்திருப்பார்.

அண்ணா வழியில் அயராது உழைப்பேன். இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கத்தை திருச்சியில் நான் முழங்கினேன். அந்த முழக்கத்தின் அடிப்படையில் இந்த இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். உரிமைக்குரல் கொடுக்க வேண்டும்.

என்னை நன்றாக திட்டுங்கள்..

என்னைப் பற்றியும், என்குடும்பத்தைப் பற்றியும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் பழித்து பேசுகிறார்கள். மரத்தின் அடியில் மாட்டு சாணத்தை கொட்டினால் அது எருவாக மாறி மரம் நன்றாக வளரும். அதேபோல் என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது. என்னை நன்றாக திட்டுங்கள். அதை நான் எருவாக மாற்றிக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் என்னை நாடகம் ஆடி என்று கூறுகிறார். ஆமாம், நானும் அண்ணாவும் உதயசூரியன், காகிதப்பூ போன்ற நாடகங்களை ஆடினோம். அப்படி நாடகம் ஆடிதான் கட்சியை வளர்த்தோம். அவர் பணத்திற்காகவும், பதவிக்காகவும் நாடகம் ஆடிவருகின்றனர்.

திருமாவளவன் எனது சொந்தக்காரர். அவருக்கும் கொள்கை உடன்பாடு உள்ளது. என் வீட்டுப் பெண் அவர் வீட்டிலும், அவர் வீட்டுப் பெண் என் வீட்டிலும் உள்ளது போல் சம்மந்தி உறவு.

இங்கு உள்ள நாம் அனைவரும் மதத்தாலும், மொழியாலும் ஒன்றாக உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சின்னம் உதயசூரியன், காங்கிரஸ் சின்னம் கை, விடுதலை சிறுத்தைகள் சின்னம் நட்சத்திரம். வானத்தில் சூரியன் இருக்கும், நட்சத்திரமும் இருக்கும்.

இதனை கை சுட்டிக்காட்டுவதுபோல நமது சின்னங்கள் பொருத்தமாக இருக்கிறது. இந்த மூன்று சின்னங்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X