இலங்கைக்கு இந்திய ஆயுதம் சென்றால் தடுப்போம்-வைகோ

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இந்தியாவில் இருந்து தமிழினத்தை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் கொண்டு சென்றால் அதனை மதிமுக தடுத்து நிறுத்தும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தஞ்சை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து வல்லம் அண்ணா சிலை அருகே வைகோ பேசுகையில்,

ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு முழுமையான தகுதி பெற்றவர். அந்தப் பதவி மீது அவர் ஆசைப்படாமல் இருக்கலாம். ஈரோட்டில் பேசிய ஜெயலலிதா, இலங்கையில் தனி தமிழீழம் அமைக்க பாடுபடுவேன் என்றார். பின்னர் இந்திய ராணுவத்தை அனுப்பி தனி தமிழீழத்தை நிர்மாணிப்பேன் என்றார்.

அவர் இப்படிப் பேசியதால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நான் கூறவில்லை. அதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் ஜெயலலிதா தான் பிரதமர் ஆக தகுதியானவர் என்று கூறினேன்.

உலகத் தமிழர்கள் வேதனையாக உள்ள நேரத்தில் ஜெயலலிதாவின் பிரகடனம் இருட்டுக்கு மத்தியில் வெளிச்சம் ஏற்பட்டதைப்போல் உள்ளது.

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக செய்தி வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதோடு, சிங்கள அரசுடன் இணைந்து காங்கிரசும் இனப் படுகொலையை நடத்துகிறது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

பிரபாகரனை அழிப்பதற்காக ஆயுதம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் கோவையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதை பெரியார் தி.கவினரும் மதிமுகவினரும் தான் செய்தனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இலங்கை படுகொலை துயரங்களை குறுந்தகடாக வெளியிடக்கூடாது என்றும், துண்டு பிரசுரங்களாக கொடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது என்ன ஹிட்லர் நாடா?.

குறுந்தகடு, துண்டு நோட்டீசு வினியோகிப்பதை போலீசார் தடுக்கலாம். ஆனால் அதனை வீடு, வீடாக காலை 5 மணிக்குள் கொடுங்கள். போலீசாரும் அந்த குறுந்தகடை வாங்கி போட்டு பாருங்கள். அப்போது இலங்கை தமிழர்களின் நிலை புரியும்.

இலங்கை தமிழர்களை அழிப்பதற்காக இந்தியாவில் இருந்து ஆயுதம் கொண்டு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும். அதற்கு என் முழு ஆதரவு உண்டு என்றார்.

காங்கிரஸ் டெபாசிட் இழக்க வேண்டும்..

பின்னர் செஞ்சியில் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியை ஆதரித்து வைகோ பேசுகையில்,

போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை சண்டை குறித்த செய்திகளை பத்திரிகைகளில் செய்தி போடக்கூடாது என்று சர்வாதிகாரியை போல் கருணாநிதி மிரட்டுகிறார்.

ராஜபக்சே இலங்கையில் யுத்த செய்திகளைப் போடக்கூடாது என்று தடை செய்து விட்டார். கருணாநிதி ராஜபக்சேவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டாரா?. வரும் 16ம் தேதி எல்லாமே தலைகீழாக மாறப் போகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் வீட்டு வாசலில் நின்று கொண்டு ராஜபக்சே, போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இலங்கை தமிழர்களை பட்டினி போட்டு கொல்ல ராஜபக்சேஅரசு முடிவு செய்துள்ளது.

ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ., சொன்னார். அது எப்படி முடியும் என்று கருணாநிதி கேட்கிறார். 70-71 ம் ஆண்டில் பாகிஸ்தானை எந்த அடிப்படையில் உடைத்து வங்க தேசத்தை உருவாக்கினீர்கள்? அதே அடிப்படையில் தான் பூர்வீக தமிழர்கள் வாழும் பகுதியை தனி ஈழமாக அமைக்க, அனைத்து தியாகத்தையும் செய்ய தயாராக அறிவித்திருக்கிறார்

காங்கிரஸ் சின்னத்தில் தமிழர்களின் ரத்தம் இருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு ஒரு ஓட்டுக் கூட போடக்கூடாது. அவர்களை எல்லா தொகுதிகளும் டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்றார் வைகோ.

ராணுவ லாரி மீது தாக்குதல்-13 பேர் சிறையில்..

இதற்கிடையே கோவை அருகே ராணுவ லாரிகளை அடித்து நொறுக்கி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் தி.கவினர், மதிமுகவினர் உள்பட 13 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் மொத்தம் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராணுவ வீரர்கள் மீது வழக்கு:

சம்பவத்தின்போது ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தாக்கியதாக போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்கள் 20 பேர் மீது சூலூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்புரியும் நோக்கத்துடன் கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், இரும்புக் கம்பியால் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+