என்னை எதிர்த்துப் போட்டியிட அன்புமணி தயாரா? அழகிரி சவால்

மதுரை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மோகன் நிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று எஸ்.எஸ்.காலனியில் பிரசாரத்தை துவக்கிய அழகிரி அரசரடி, மேலபொன்னகரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி அரசியல் ஆதயம் தேடுவது ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் தான். ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு இப்போது அதிமுக அணிக்கு சென்றுவிட்டனர்.
வேட்டியையும், சேலையையும் மாறி மாறி சுமப்பதே அவர்களது வேலையாகி விட்டது. ராமதாசும், அன்புமணியும் தான் அரசியல் நாடகம் ஆடுகிறார்கள். எனக்கு அரசியல் தெரியாது என்கின்றனர். அன்புமணி என்னை எதிர்த்து எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு பார்க்கட்டும். அவரை டெபாசிட் இழக்கச் செய்வேன் என சவால் விடுகிறேன்.
முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிலோ அரிசி ஒரு ரூபாய், விவசாய கடன் ரத்து, முதியோர், கர்ப்பிணி பெண்கள், வேலையில்லாதோருக்கு உதவி தொகை வழங்கி வருகிறார்.
அவர் சொன்னதை செய்யக்கூடியவர். அதே போல் நானும் சொன்னதை செய்து காட்டுவேன். மதுரை தொகுதியின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் தீர்த்து வைப்போன். மத்தியில் சோனியா தலைமையில் மீண்டும் ஆட்சி மலரவும், தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடரவும் என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications