தோல்வியை ஒப்புக் கொண்ட காங்: பிருந்தா கரத்
மதுரை: தேர்தலுக்குப்பின் இடதுசாரிகள், காங்கிரஸ் அரசை ஆதரிப்பார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் தெரிவித்துள்ளார்.
மதுரை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மோகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா கரத் மதுரை வந்துள்ளார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மதுரை தொகுதி தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.
அதன் அடிப்படையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இதன் மூலமாக இங்கு விதிமுறை மீறல் நடைபெறுகிறது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்த நடவடிக்கை மட்டும் போதாது மதுரை மாவட்ட ஆட்சியர் சீத்தாராமனை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையம், மதுரை வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் அவர்கள் அளிக்கப் போகும் வாக்கு ரகசியமாக இருக்கும் என்பதை உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மதுரை தொகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையை கூடுதலாக பணியமர்த்த வேண்டும்.
ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வகையில், பணம், அதிகார துஷ்பிரயோகம், அடியாட்கள் பலம் ஆகியவற்றை ஆளும் கட்சியினர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
ராஜாவின் 'வைமேக்ஸ்' ஊழல்...
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா ஸ்பெக்ட்ரம் ஊழலை தொடர்ந்து அடுத்து செய்திருக்கும் மற்றொரு ஊழல் அம்பலமாகியுள்ளது. 'வைமேக்ஸ்" எனப்படும் இணையதள சேவையை வழங்குவதற்கு பெறப்பட்ட ஒப்பந்த மனுவில் ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
அவற்றில் ஐந்து நிறுவனங்கள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது. ஆறாவது நிறுவனம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவரின் நிறுவனமாகும்.
இதை ஆதாரப்பூர்வமான தகவல்களோடு நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது.
மிஸ்டர் கிளீன் என்று கூறிக் கொள்ளும் மன் மோகன்சிங் இப்படிப்பட்ட அசிங்கமான பேரங்களுக்கு ஒத்துக்கொள்வது என்பது ஊழலுக்கு துணை போகும் காங்கிரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறது.
தேர்தலுக்குப்பின் இடதுசாரிகள், காங்கிரஸ் அரசை ஆதரிப்பார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது என்றார்.


Click it and Unblock the Notifications
