தலைவர்களை மதிக்கத் தெரியாதவர் ஜெ-அன்பழகன்
பெரம்பலூர்: எதிர்க்கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் மதிக்க தெரியாதவர் ஜெயலலிதா என திமுக பொதுச் செயலாளரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் நெப்போலியனை ஆதரித்து திமுக பொதுச் செயலாளரும் நிதியமைச்சருமான க.அன்பழகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மதவாதத்தை அனுமதிக்காத ஆட்சிதான் காங்கிரஸ் ஆட்சி. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பாஜக கட்சியே காரணம். பாஜகவின் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியவர் ஜெயலலிதா.
திமுக கூட்டணியில் இருந்து பாமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் விலகிப் போனாலும் மக்கள் நம்மோடுதான் உள்ளனர். பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா.
அவரது ஆட்சியில் தமிழகம் முடமாகி போய்விடும் என கூறியவர் டாக்டர் ராமதாஸ். ஆனால், இன்று அவர் ஜெயலலிதா பிரதமராக போகிறார் என்று கூறி வருகிறார்.
அரசியல் தெரிந்தவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார்கள். வைத்துக் கொண்டால் அது தகாத உறவு என கூறியவர் தான் ராமதாஸ். இன்று அவர் தகாத உறவை மறந்து சகோதரி என்று கூறுகிறார்.
எனக்கு குடும்பம் இல்லை என்று சொல்லும் ஜெயலலிதா, சிறுதாவூரில் பலநூறு அறைகளை கொண்ட பங்களா, கோடநாட்டில் தேயிலை தோட்டத்துடன் கூடிய பங்களா, ஆந்திராவில் திராட்சை தோட்டம் என்று யாருக்காக சம்பாதித்து வைத்துள்ளார்.
மத்தியில் மதசார்பற்ற நடுநிலையுடன் கூடிய ஆட்சியை காங்கிரசால் மட்டுமே அமைக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications