பாரதிராஜா, நெடுமாறன் கைது: வரலாறு மன்னிக்காத துரோகம்-வைகோ
சென்னை: தமிழகம் வந்த சோனியாவுக்கு கருப்பு கொடி காட்டியதற்காக பாரதிராஜா, நெடுமாறன் ஆகியோரை கைது செய்துள்ள கருணாநிதி அரசின் செயல் வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகம் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லை என்றும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இருக்கிறோம் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் சென்னைக்கூட்டத்தில் கூறினார். இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்.
நேற்று சென்னையில் பேசிய சோனியாவும், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு இந்திய அரசின் முயற்சியே காரணம் என்று கூறியுள்ளார். பொய் பேசுவதில் கோயபல்சையும் மிஞ்சிவிட்டார் சோனியா.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டு, 5000 தமிழர்கள் மரணகாயத்துக்கு உள்ளாக்கப்பட்டு மூன்றரை லட்சம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிப் பரிதவித்துக் கொண்டுள்ள நிலையில் தமிழர்களை ஏமாளிகள் என்று நினைத்து பேசியுள்ளார்.
இன்னும் நான்கைந்து நாட்களில் தமது அதிகாரம் முடிவுக்கு வரப்போவதை உணர்ந்து கொண்ட சோனியா. அடு்த்த ஐந்து தினங்களில் ஈழத்தமிழ் இனத்தையே பூண்டோடு ஒழித்திட ராஜபக்சேவுடன் சேர்ந்து வகுத்த சதித்திட்டம் தான் இத்தாக்குதல்களாகும்.
சொரணை செத்துவிடவில்லை...
தமிழன் மானம் இழந்துவிடவில்லை. சொரணை செத்துவிட வில்லை என்பதை நிரூபிக்கின்ற வகையில் சென்னைக்கு வந்த சோனியாவுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான குழுவினர் கருப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவித்தனர்.
அவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் பூட்டியுள்ள கருணாநிதி அரசின் இனத்துரோக செயலை வன்மையாக கண்டிக்கிறேன். வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகத்துக்கு உடந்தையாக இருந்தவர் கருணாநிதி என்ற அவப்பெயரை சுமந்து நிற்கிறார்.
ராஜபக்சே-சோனியா-கருணாநிதி கூட்டுசதி...
ஈழத்தமிழர் இனத்தையும் அவர்களை காத்து நிற்கும் விடுதலை புலிகளையும் முற்றாக கொன்று ஒழிக்க ராஜபக்சே-சோனியா-கருணாநிதி போட்ட ரகசிய சதித்திட்டத்தின் விளைவு தான் தொடரும் மரண பயங்கரத் தாக்குதல்களாகும்.
உலகத் தமிழர்களே! தாயகத் தமிழர்களே! இவர்களுடைய துரோகத்தைப் புரிந்து கொள்வீர் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் வைகோ.
வைகோவுக்கு சட்ட மாணவர்கள் பிரசாரம்
இதற்கிடையே வைகோவுக்கு ஆதரவாக விருதுநகர் தொகுதியில் சட்ட கல்லூரி மாணவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு நூறு பேர் வீதம் விருதுநகர் தொகுதியில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர், டி.கல்லுப்பட்டி, பேரையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் உள்பட பல பகுதிகளில் சட்ட கல்லூரி மாணவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications