இலங்கை: ஐநா நடவடிக்கை-ஜப்பானுக்கு கோரிக்கை
நியூயார்க்: இலங்கையில் நடந்து வரும் மிகக் கொடூரமான மனிதப் படுகொலையைத் தடுத்து நிறுத்த, ஐ.நா. எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவ வேண்டும், ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, சர்வதேச நெருக்கடி குழுமம், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், உலகளாவிய பாதுகாப்பு பொறுப்பு மையம் ஆகிய மனித உரிமை அமைப்புகள் ஜப்பான் பிரதமர் டாரோ அசோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
அக்கடிதத்தில் இவை கூறியுள்ளதாவது:
மனித உரிமைகளுக்கும், மனிதாபிமானத்திற்கும் உயரிய மதிப்பு கொடுக்கும் நாடு ஜப்பான். இலங்கைக்கு பெருமளவில் நிதியுதவி வழங்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
எனவே இலங்கையில் தற்போது பெருமளவில் உயிரிழந்து வரும் எண்ணற்ற அப்பாவி மக்களைக் காப்பாற்றும் கடமையும், பொறுப்பும் ஜப்பானுக்கு உண்டு.
மேலும், இலங்கையில் நீடித்த அமைதியும், மனித உரிமைகள் தழைத்தோங்கவும், வளர்ச்சி பெருகவும் ஜப்பான் பெரும் பங்காற்ற வேண்டியுள்ளது.
இந்தப் பொறுப்பை ஏற்க தான் தயார் என்பதை ஜப்பான் உலகுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
இலங்கையில் தற்போது நிலவும் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணும் பெரும் பொறுப்பு ஜப்பானுக்கு உள்ளது. எனவே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை தொடர்பான விவாதம் வரும்போது அதில் முக்கிய உறுப்பினரான ஜப்பான் இலங்கையில் சுமூக நிலைமை திரும்ப ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டும்.
மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மதிக்காமை ஆகியவற்றை விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பெருமளவில் செய்து வருகின்றன.
இலங்கை நிலவரம் தொடர்பாக மேம்போக்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதித்தது போதுமானதல்ல. இதுதொடர்பாக முறையான கூட்டம் கூட்டப்பட்டு, அவசர முடிவுகளை பாதுகாப்பு கவுன்சில் எடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள நெருக்கடி தீர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை கவுன்சில் மேற்கொள்ள வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் முழு ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு முரண்பாடாக செயல்பட முனையக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அமைச்சரக அளவிலான கூட்டம் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications