அய்லா புயல் மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது
கொல்கத்தா: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அய்லா புயல் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக்கடலில் மேற்கு மத்திய பகுதியில் ஒரிசாவின் பாரதீப துறைமுகத்திலிருந்து தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை பிரதீப்பின் தென் கிழக்கே 350 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.
அது மேலும் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து சாகர் தீவில் இருந்து 100 கிலோமீட்டர் கிழக்கே மேற்கு வங்காளம் - வங்காள தேசத்துக்கு இடையே இன்று மாலை கரையை கடக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, அந்த பகுதியில் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் அய்லா புயல் கொல்கத்தாவை நெருங்கியது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. ஏராளமான மரங்கள் சூறைக் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகள் அனைத்தும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று பிற்பகலுக்கு மேல் அய்லா புயல் மேற்கு வங்கக் கடலோரத்தில் கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இருப்பினும் சேத விவரம் இதுவரை தெரியவில்லை.
புயலுக்கு வடக்கு கொல்கத்தாவில் ஒருவரும், தெற்கு கொல்கத்தாவில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு பணிகளுக்காக ஏற்கனவே ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பரவலாக மழை..
இதற்கிடையே, அய்லா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று பரவலாக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவும். கடலில் காற்று அதிகமாக வீசும். இதனால், கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்.
எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். அதற்கேற்ப கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
சென்னையில் நல்ல வெயில் அடித்தது. இருப்பினும் கூடவே பலத்த காற்றும் வீசியபடி இருந்தது.
கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு..
நேற்று முதல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வரும் கன்னியாகுமரி கடல் இன்றும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பலத்த சூறைக் காற்றும் வீசுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்தவண்ணம் உள்ளன.
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை. மேலும் திருவள்ளுவர் சிலைக்கான படகுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications