நாகர்கோவில்-மாணவர்களை வெட்டிய கேரள கூலிப்படை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தில் போலீசார் அதே கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கேரள கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த தீபக், அனீஸ்குமார், கோட்டயத்தை சேர்ந்த அஸ்வின் குமார் ஆகியோர் படித்து வருகின்றனர்.
அவர்கள் புத்தேரி குறிஞ்சி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கும்பல் ஒன்று திடீரென இவர்களது வீட்டுக்குள் புகுந்து, அவர்களை சராமரியாக அரிவாளால் வெட்டியது.
மேலும், வீட்டில் இருந்த பைக், டிவி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோடி விட்டது. படுகாயமடைந்த மாணவர்கள் மூன்று பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அதே கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் உள்பட மொத்தம் 11 பேர் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சரத், விஜின், சதீஷ், நவீன் ஆகிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அந்த மாணவர்களுடன் வந்த கூலிபடையினர் தான் மூவரையும் சராமரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அந்த கும்பலில் இருந்தவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications