ராமேஸ்வரம் கோவிலுக்கு சுவிஸ் பெண்மணியின் ஆச்சரிய நன்கொடை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி ரூ. 2.08 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ. 4 லட்சம் நன்கொடையையும் அவர் அளித்து வருகிறார்.
அவரது பெயர் எலிசபெத் ஸீகர். ஆனால் இவர் யார், எப்படி இருப்பார் என்பதே கோவில் நிர்வாகத்துக்குத் தெரியாதாம்.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் பானுமதி நாச்சியார் கூறுகையில், 2006ம் ஆண்டு நான் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்ற போது, கோப்பில் எலிசபெத் எழுதிய ஒரு கடிதம் இருந்ததைக் கண்டேன்.
அதில், கோவிலுக்கு தான் நன்கொடை தர விரும்புவதாகவும், எப்படி அனுப்ப வேண்டும் என்பதைத் தெரிவிக்குமாறும் கோரியிருந்தார் எலிசபெத்.
இதையடுத்து நான் அவருக்கு நன்றி தெரிவித்தும், எந்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என்பதையும் விவரித்து அவருக்கு பேக்ஸ் அனுப்பினேன்.
இதையடுத்து உடனடியாக ரூ. 4 லட்சம் பணத்தை நன்கொடையாக அனுப்பி வைத்தார் எலிசபெத். அன்று முதல் கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தவறாமல் ரூ. 4 லட்சம் பணத்தை அனுப்பி வருகிறார்.
தற்போது ரூ. 2.08 கோடியை அவர் அனுப்பி வைத்துள்ளார். இதை தமிழ்நாடு மின் நிதி கழகத்தில் டெபாசிட் செய்துள்ளோம் என்றார் நாச்சியார்.
தான் அனுப்பும் பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதையும் எலிசபெத் தெளிவாக குறிப்பிட்டுள்ளாராம். தினசரி பூஜைக்கான செலவுகள் தவிர, ஆண்டுதோறும் ஒரு முறை ருத்ர பூஜை மற்றும் மகாசிவராத்திரியன்று நடைபெறும் பூஜைக்கு செல்விட வேண்டும் என அவர் கூறியுள்ளாராம்.
இதுதவிர ஆண்டுதோறும் டிசம்பர் 11ம் தேதியன்று 101 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications
