பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அங்கீகாரம்-திமுக தீவிரம்

Subscribe to Oneindia Tamil

Nepoleon
டெல்லி: பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான (ஓபிசி) சாம்பியன்களாக வலம் வந்த லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் அரசியல் மூலையில் ஓரங்கப்பட்டு விட்ட நிலையில், இந்த இடத்தைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் திமுக இறங்கியுள்ளது.

வடக்கில் லாலுவும், முலாயமும் தான் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களாக, ஏக போக பிரதிநிதிகளாக வலம் வந்து கொண்டிருந்தனர். தமிழகத்தில் டாக்டர் ராமதாஸ் அந்த இடத்தை கஷ்டப்பட்டுப் பிடித்து உலா வந்து கொண்டிருந்தார்.

முதல்வர் கருணாநிதி, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு போராட்டங்கள், கோரிக்கைகள் உள்ளிட்டவற்றில் முதல் நபராக இருந்தாலும் கூட, ராமதாஸின் விஸ்வரூபம் அதை மறைக்கவே செய்தது.

தற்போது இவர்கள் அனைவருமே முடங்கிப் போய் விட்டனர். இந்த நிலையில் திமுகவுக்கு தனிப் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூக நீதித்துறை இணையமைச்சர் பொறுப்பை திமுக கேட்டுப் பெற்றது அதை நெப்போலியன் வசம் தந்துள்ளது.

அமைச்சராகி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தனது முதல் வேலையே தேசிய பிற்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்திற்கு அரசியல் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதுதான் என்று கூறியுள்ளார் நெப்போலியன்.

இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் உரிய முடிவுகளை எடுக்கக் கூடிய அங்கீகாரம், சட்ட அந்தஸ்து இந்த ஆணையத்திற்கு கிடைக்கும்.

தற்போது இந்த ஆணையத்தின் பணி வெறுமனே, பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பட்டியலில் புதிய ஜாதிகளை சேர்ப்பதும், நீக்குவதும் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் ஆணையம் பொம்மை போல உள்ளது.

இந்த நிலையில் தான் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தருவதே தனது முதல் வேலை என்று கூறியுள்ளார் நெப்போலியன்.

இந்தக் கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் இது மிகப் பெரிய வேலை, மிகவும் கவனத்துடன் செய்யப்பட வேண்டியது என்பதால் கடந்த கால அரசுகள் இதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டதைப் போல அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படும் வாய்ப்பு திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்திற்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுத் தர திமுக மும்முரமாக உள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தற்போது அதை மத்திய அரசிடம் நினைவூட்டி பணிகளை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளாராம் நெப்போலியன்.

கருணாநிதி எழுதிய கடிதம்தான் எனது ஆயுதம். அதைப் பயன்படுத்தி உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவேன் என்கிறார் நெப்போலியன்.

நெப்போலியன் இப்படி ஒரு பக்கம் ஆணையத்திற்கு அதிகாரம் பெற மும்முரமாக உள்ள நிலையில், தேசிய அளவில் லாலுவும், முலாயமும் பலவீனமாக உள்ள நிலையில், தமிழகத்தில் ராமதாஸ் ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாம்பியன் ஆகும் முயற்சிகளில் முதல்வர் கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் ஹீரோவாக உருவெடுப்பதற்கு, தேசிய ஆணையத்திற்கு சட்டப் பூர்வ அந்தஸ்தைப் பெற வேண்டியது அவசியம் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார். எனவேதான் அந்த முயற்சிகளுக்கு அவர் முன்னுரிமை கொடுக்க நெப்போலியனுக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

தலைவரின் இந்த முயற்சிகளுக்கு சிஷ்யர் நெப்போலியன் எந்த வகையில் உறுதுணையாக இருக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+