நகை புரோக்கர் கொலை: கணவரை போலீஸ் மறைத்து வைத்திருப்பதாக மனைவி வழக்கு
சென்னை: நகை வியாபாரியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட எனது கணவரை போலீசார் சட்டவிரோத காவலில் சித்ரவதை செய்து வருகின்றனர். அவரை மீட்டு தர வேண்டும் என எச்.பி. கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் ஒருவரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் கடந்த 6ம் தேதி நகை புரோக்கர் சுரேஷ்குமார் என்பவர் பல துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலின் பாகங்களை பல இடங்களில் கண்டெடுத்த போலீசாரால் இன்னும் அவரது தலையை மட்டும் கண்டுபிடிக்கவில்லை.
இது தொடர்பாக விசாரித்து வரும் பூக்கடை போலீசார், செல்வகுமார் (36) என்பவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து விசாரித்து வருவதாக அவரது மனைவி ராஜலட்சும் (28) குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு (ஹேபியஸ் கார்பிஸ்) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில்,
எனது கணவர் பிரபல எச்.பி. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி மாலை 4 மணிக்கு பூக்கடை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்து அவரை அழைத்து சென்றனர். அவர்கள் நகை வியாபாரி சுரேஷ்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கூறினர்.
இரண்டு நாட்கள் ஆகியும் எனது கணவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நானே காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பார்த்தேன். அப்போது எனது கணவரை அவர்கள் மூன்று நாட்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து சித்ரவதை செய்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து நான் எனது கணவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷ்னர், வடசென்னை இணை கமிஷ்னர் மற்றும் துணை போலீஸ் கமிஷ்னர் ஆகியோருக்கு தந்தி கொடுத்தேன். ஆனால், இதுவரை எனது கணவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
போலீசாரின் சட்டவிரோத காவலில் இருந்து அவரை மீட்டு, உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்படி நீதிமன்றத்தை கேட்டு கொள்கிறேன் என அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் முகோபாத்தியா, இளங்கோ ஆகியோர் இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் பூக்கடை இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் தனது உத்தரவில் தெரிவித்தனர்.
சுரேஷ் குமார் உடல் அடக்கம்..
இந்நிலையி்ல் சுரேஷ்குமாரின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மதியம் சுமார் 1.30 மணிக்கு துவங்கிய பிரேத பரிசோதனை மாலை 4 மணி வரை நடந்தது.
சென்னை அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் சத்திய மூர்த்தி, ராஜாமணி பீமாராவ், மகேந்திரன் ஆகியோர் இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். சுரேஷ்குமாரின் உடலில் இருந்து டிஎன்ஏ பரிசோதனைக்காக சில உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
சுரேஷ்குமாரின் உடல் கூர்மையான ஆயுதத்தால் மிகவும் நேர்த்தியாக துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவரது உடல் அவரது தந்தை கோவிந்த ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இறுதிசடங்கு நடத்தப்பட்டு தலை இல்லாத அவரது உடல் மாலை ஆர்.ஆர்.நகர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications