கர்நாடகத்தில் காணாமல் போன அணு விஞ்ஞானியின் உடல் மீட்பு - கொலை என மாமனார் சந்தேகம்

சென்னையைச் சேர்ந்தவர் லோகநாத் மகாலிங்கம் (47). அணு விஞ்ஞானியான இவர் கர்நாடக மாநிலம் கைகாவில் உள்ள அணு மின் நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 8ம் தேதி இவர் காலையில் வாக்கிங் சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி விநாயக சுந்தரி போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து மகாலிங்கத்தை யாரேனும் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும், சிறுத்தைகள் கடித்து உள்ளே தூக்கிச் சென்றிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது.
அதேசமயம், மகாலிங்கத்தின் குடியிருப்பு உள்ள பகுதியில் காளி ஆறு ஓடுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. அதில் மூழ்கி மகாலிங்கம் இறந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்த மூன்று கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஆற்றின் ஓட்டத்தில் சிக்கி மகாலிங்கம் இறந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.
இதையடுத்து கடற்படையில் உள்ள நீச்சல் வீரர்களை வரவழைத்து தேடுதல் வேட்டை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ஆற்றில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதில் ஆற்றுப் படுகையில், மகாலிங்கத்தின் இறந்த உடல் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து மகாலிங்கத்தின் உடலை கடற்படை வீரர்கள் மீட்டனர்.
அவர் எப்படி ஆற்றில் விழுந்தார். தானாக விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை. யாரேனும் அவரை கொலை செய்து ஆற்றில் போட்டிருக்கலாமா என்றும் தெரியவில்லை.
பிரேதப் பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர்தான் மகாலிங்கத்தின் மரணம் குறித்து தெளிவு வரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மகாலிங்கத்தின் மாமனார் பெயரும் மகாலிங்கம்தான். இவர் சென்னையில் வசிக்கிறார். தனது மருமகன் மரணம் குறித்து மகாலிங்கம் கூறுகையில், எனது மகளுக்கும் மருமகனுக்கும் 1988-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். யாரிடமும் எந்த பிரச்சினையும் வைத்துக் கொள்வது இல்லை.
தினமும் காலையில் எழுந்ததும் நடை பயிற்சி செல்வார். ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று விட்டு திரும்பி வந்து விடுவார்.
சம்பவ நாளுக்கு முன்பு 3 நாட்களாக மழை பெய்தது. இதனால் அவர் அந்த நாட்களில் நடை பயிற்சி செல்லவில்லை. 8-ந்தேதி காலை மழை இல்லை. இதனால் அன்று வாக்கிங் போனார். ஆனால் வீடு திரும்பவில்லை.
அவருடைய உடல் வழக்கமாக வாக்கிங் செல்லும் இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்து உள்ளது. அந்த இடத்துக்கு அவர் ஒருபோதும் செல்லவே மாட்டார். எனவே சாவில் மர்மம் இருக்கிறது.
இதற்கு முன்பு ஒரு தடவை இதே போல காணாமல் போனதாக செய்திகள் வந்தன. அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை.
உயிருடன் மீட்கப்பட்டு விடுவார் என்று எதிர்பார்த்தோம். அவர் இறந்து விட்டார் என்று தகவல் கிடைத்ததால் நாங்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications