நகை புரோக்கர் கொலை-ஆந்திர நகை வியாபாரி கைது?
சென்னை: சென்னை நகை புரோக்கர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் ஆந்திராவை சேர்ந்த நகை வியாபாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வர இருக்கின்றனர்.
கடந்த 6ம் தேதி சென்னை முத்தமிழ் நகரை நகை புரோக்கர் சுரேஷ்குமார் என்பவர் பல துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளி அவரது உடலின் பாகங்களை பல இடங்களில் போட்டிருந்தனர். கொலை செய்யப்பட்டு எட்டு நாட்கள் முடிந்த நிலையிலும் அவரது தலை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
கொலையான சமயத்தில் அவர் கையில் வைத்திருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 2.1 கிலோ தங்கம் எங்கே போனது என்று தெரியவில்லை, மேலும் கொலையாளி யார் என்பதை உறுதி செய்யமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் தலையில்லாத அவரது உடலுக்கு போலீசார் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்து, உடலை அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அது புதைக்கப்பட்டது.
தற்போது போலீசார் சுரேஷ்குமார் நகை தொழில் தொடர்பாக யாருடன் பழகி வந்தார், அவருக்கு தொழில் விஷயத்தில் போட்டியாளர்கள், விரோதிகள் யாரும் உள்ளனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அவர் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணையில் வலுத்து வருவதாக தெரிகிறது.
கள்ளக்காதல் காரணமா...
இந்நிலையில் சுரேஷ்குமாருக்கும், அவருடைய நண்பர் ஒருவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.
சுரேஷ்குமாரும், அவரது கள்ளக்காதலியும் மொபைலில் பேசிய உரையாடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தான் அவர் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரை விசாரிக்க வைத்துள்ளது.
இவர்களுடைய கள்ளத்தொடர்பு தெரிந்த நிலையில் சுரேஷ்குமாரின் நண்பர் அவரை தி்ட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சுரேஷ்குமார் கடைசியாக செளகார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் இருந்து பேசியுள்ளார். அந்த பகுதியில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் வைத்து தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
அவரது தலை என்ன ஆனது. புதைக்கப்பட்டதா, எரிக்கப்பட்டதா அல்லது கூவம் போன்ற பகுதிகளி்ல் வீசப்பட்டதா என்பதை கொலையாளி பிடிபட்ட பின்பு தான் உறுதியாக சொல்ல முடியும்.
தற்போது சுரேஷ்குமார் நகைக்காக கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. அவரது மொபைலில் இருந்த நம்பரை வைத்து விசாரித்த போது கொலை நடந்த அன்று மாலை 4 மணிக்கு அவர் கோபி என்ற வியாபாரியிடம் 2.1 கிலோ நகைகளை விற்பனைக்காக வாங்கி சென்றுள்ளார்.
அவரிடம் விசாரிக்கையில், என்எஸ்சி போல் ரோட்டில் உள்ள பவுன் குமார் என்பவரின் நகை கடையில் வைத்து சுரேஷ்குமார் என்னிடம் நகைகளை வாங்கி சென்றார். விரைவில் பணத்துடன் திரும்புகிறேன் என சொன்னவர் நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் அவருக்கு போன் செய்தேன். அவர் 15 நிமிடத்தில் வருவதாக சொன்னார் என கோபி தெரிவித்துள்ளார்.
கோபியை தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த நகை வியாபாரி ஈஸ்வர பிரசாத் என்பவர் சுரேஷ்குமாரிடம் பேசியுள்ளார். இதையடுத்து ஆந்திரா சென்ற போலீசாருக்கு அவர் ஒரிசாவில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலிசார் ஒரிசா சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் தனக்கு கொலையில் தொடர்பு இல்லை என மறுத்துள்ளார். மனைவியோடு வால்டாக்ஸ் ரோட்டில் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த போது சுரேஷ்குமாரிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
அவர் மறுத்துவிட்டாலும் அவரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications