ரயிலில் வழங்கப்படும் சாப்பாடு அளவு அதிகரிப்பு - காபி விலை மட்டும் குறைப்பு
சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், ரயில்வே பிளாட்பாரங்களிலும் விற்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் விலைக் குறைப்பு செய்யப்படவில்லை. மாறாக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் தரப்படும் காபி விலை மட்டும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரயில் நிலையங்களிலும், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மூன்று நேரமும் சாப்பாடு தரப்படுகிறது. இவற்றின் அளவு குறைவாக இருப்பதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
ஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால் மக்கள் பாதிக்ப்படுவார்கள் என்பதால் அளவை மட்டும் குறைத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறி வந்தது.
ஒரு உளுந்த வடை முன்பு 120 கிராம் எடையில் இருந்தது. பின்னர் அது பாதி எடையாக குறைக்கப்பட்டது. அதேபோல இரண்டு இட்லியின் எடை 200 கிராமில் இருந்து 150 கிராமாக குறைக்கப்பட்டது. வெண் பொங்கலை 50 கிராம் குறைத்தனர்.
முதல் வகுப்பு பெட்டியில் வழங்கப்படும் டீ, காபியின் விலை மட்டும் உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சரான பின்னர் ரயில்வே நிர்வாகத்தை சீரமைத்து வருகிறார்.
முதல் வேலையாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக விற்கப்படும் உணவுப் பொருட்களின் அளவை அதிகரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல முதல் வகுப்பு ஏசி பெட்டியில்த ரப்படும் காபியின் விலையையும் பாதியாக குறைக்க உத்தரவிட்டுள்ளார்.
முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பிளாஸ்க்கில் தரப்படும் டீயின் விலை ரூ. 10லிருந்து 5 ஆகவும், காபியின் விலையை ரூ. 14லிருந்து 7 ஆகவும் குறைத்துள்ளனர்.
மற்ற பெட்டிகளில் தரப்படும் டீ, காபியின் விலை குறைக்கப்படவில்லை.
அதேபோல ரூ. 10க்கு விற்கப்படும் ஜனதா சாப்பாட்டின் விலையிலும் மாற்றம் இல்லை.
உணவுப் பொருட்களைப் பொருத்தமட்டில், 150 கிராம் கொண்ட 3 இட்லிகளுக்கு பதிலாக 200 கிராம் எடை கொண்ட 4 இட்லிகள் இப்போது வழங்கப்படுகின்றன. வெண் பொங்கலின் எடை 150 கிராமில் இருந்து 200 கிராமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது
60 கிராம் கொண்ட 2 உளுந்த வடை, இப்போது 120 கிராம் எடையுடன் 4 உளுந்த வடைகளாக தரப்படுகிறது. இட்லி-வடை, உப்புமா-வடை, பொங்கல்-வடை கெட்டியான தேங்காய் சட்னியுடன் ரூ.18.50-க்கு கிடைக்கிறது.
முன்பு ரயில்களில் வழங்கப்படும் சைவச் சாப்பாட்டின் விலை ரூ. 32 ஆக இருந்தது. தயிர் தனியாக வாங்க வேண்டும். அதன் விலை ரூ. 5. இப்போது இதில் சிறிய மாற்றம். அதாவது தயிருக்கு தனியாக காசு தர வேண்டாம். சைவச் சாப்பாட்டுடன் சேர்த்து இனி தயிரும் தரப்படும்.
அசைவ சாப்பாடு தயிருடன் 37 ரூபாய். சைவச் சாப்பாட்டில் தரப்படும் உணவுப் பண்டங்களுடன் கூடுதலாக 2 முட்டை மற்றும் முட்டைக் குழம்பு தரப்படும்.
ரயில்களை விட ரயில் நிலையங்களில்தான் சைவ, அசைவ சாப்பாட்டின் விலை குறைவாகும். ரெயில் நிலையங்களில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல்களில் 30 ரூபாய்க்கு சைவ சாப்பாடும், 35 ரூபாய்க்கு அசைவ சாப்பாடும் கிடைக்கிறது. இருந்தாலும் ரயில்களில் தரப்படும் உணவுப் பொருட்கள் பல இதில் இடம் பெறுவதில்லை. தண்ணீரும் சேர்த்து தரப்படுவதில்லை.
இந்த மாற்றங்கள் ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கூடவே, ரயில்களில் மட்டும் இவ்வளவு குறைவான விலையில் நிறைவாக சாப்பாடு தர முடிகிறதே, ஏன் ஹோட்டல்களில் தர முடியவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
இந்தக் கோரிக்கையை அரசுதான் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications