ஆஸி. தாக்குதல்கள்-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவெறித் தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் இந்தியர்கள் தாக்கப்பட்டு வருவது தொடர்பாக ரன்பீர் யாதவ் என்பவர் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆஸ்திரேலியாவில் 97,000 இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 47 பேர் விக்டோரியா மாகாண கல்வி நிலையங்களில் படிக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் மொத்த வெளிநாட்டு மாணவர்களி்ல் 18 சதவீதம் பேர் இந்தியர்கள் தான்.
இவர்களில் 1,447 இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. வெளிநாட்டில் இந்தியர்களை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக தூதரகரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
ஆனால், ஆஸ்திரேலியா, கனடாவில் தாக்கப்படும் இந்தியர்களின் நலனைக் காக்க வெளியுறவுத்துறையோ மனித வளத்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடு்த்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதை விளக்கி வரும் 26ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications