இலங்கை ராணுவத்தில் 'தமிழ் ரெஜிமென்ட்'-கருணா
கொழும்பு: இலங்கை ராணுவ வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழர்களைக் கொண்ட ரெஜிமென்ட் ஒன்று தொடங்கப்படவுள்ளதாக கூறியுள்ளார் தற்போது அமைச்சராக உள்ள முன்னாள் எல்டிடிஇ தளபதிகளில் ஒருவரான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன்.
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளை தற்போது ராணுவத்தில் சேர்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தற்போது கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான பிரிவுகளில் இருப்பவர்கள் ஆவர்.
இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் பெருமளவில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் ராணுவத்தில் தனியாக தமிழ் ரெஜிமென்ட் ஒன்று தொடங்கப்படவிருப்பதாக கூறுகிறார் கருணா. இதுகுறித்து அவர் கூறுகையில் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா சமீபத்தில்தான் இந்தத் திட்டம் குறித்து தெரிவித்தார்.
என்னுடன் முன்பு போராளிகளாக இருந்த பலரும் ராணுவத்தில் சேர்ந்து வருகின்றனர். இதுவரை 600 பேர் சேர்ந்துள்ளனர். மொத்தம் 900 பேர் விண்ணப்பித்திருந்தனர். மற்றவர்களும் விரைவில் சேருவார்கள்.
அவர்களில் சிலர் அதிகாரிகள் அந்தஸ்தில் கூட நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தற்போதைக்கு கிழக்கு மாகாணத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். போர் முடிந்து விட்டதால் மற்ற பகுதிகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்றார் கருணா.
அதேசமயம், கருணாவுக்குப் போட்டியாளராக மாறி விட்ட கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் பிரிவைச் சேர்ந்தவர்களிடையே ராணுவத்தில் சேரும் ஆசை இல்லையாம்.
இதுகுறித்து பிள்ளையான் கூறுகையில், எனது தொண்டர்களுக்கும் ராணுவத்தில் சேர அழைப்பு வந்தது. ஆனால் 10 பேர் மட்டுமே முன்வந்தனர் என்கிறார் பிள்ளையான்.
ஆனால் பிள்ளையான் தரப்பை ராணுவத்தில் சேர்க்க விடாமல் கருணா தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளை தடாலடியாக கைவிட்டவர் கருணா. ஆனால் கருணாவுக்கே ஆப்படித்தவர் பிள்ளையான் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications