சிறுநீரக மோசடி-சென்னை டாக்டருக்கு மீண்டும் லைசன்ஸ்
சென்னை: கடந்த ஆண்டு சிறுநீரக மோசடியில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை டாக்டர் பழனி ரவிச்சந்திரனுக்கு மீண்டும் தொழில் புரிய லைசன்ஸ் வழங்கி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கடந்த புதன்கிழமையன்று ரத்து செய்யப்பட்ட லைசன்ஸை மீண்டும் வழங்கியுள்ளது மருத்துவ கவுன்சில்.
சிறுநீரக மோசடியில் சிக்கிய பின்னர் டாக்டர் ரவிச்சந்திரனின் லைசன்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மும்பை போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையைச் சேர்ந்த செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் பாரதிராஜா மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வந்தார் டாக்டர் ரவிச்சந்திரன். இந்த மருத்துவமனைகளைப் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.
ஆனால் இதற்கான சிறுநீரகங்களை மிகவும் குறைந்த விலையில் பெற்று அவற்றை பெரும் விலைக்கு விற்றதாக அவர் மீது மும்பை போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில்தான் ரவிச்சந்திரனுக்கு ரத்து செய்யப்பட்டிருந்த லைசன்ஸை மீண்டும் கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது மருத்துவக் கவுன்சில். இருப்பினும் அவர் சிறுநீரகவியல் டாக்டராகப் பணியாற்றக் கூடாது, பொது மருத்துவராகவே பணியாற்ற வேண்டும் என மருத்துவ கவுன்சில் நிபந்தனை விதி்த்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறுகையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின்பேரில் லைசன்ஸை நாங்கள் சஸ்பெண்ட் செய்து வைத்தோம். தனது டிகிரியை மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாமல் சிறுநீரகவியல் நிபுணராக அவர் பணியாற்றியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும் அவர் தன்னைப் பொது மருத்துவராகப் பதிவு செய்துள்ளதால் பொது மருத்துவராக அவர் பணியாற்ற லைசன்ஸ் தரலாம் என தீர்மானிக்கப்பட்டு சஸ்பெண்ட் முடிவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே தான் படித்த டிஎம் (சிறுநீரகவியல்) படிப்பை இன்று பதிவு செய்யப் போவதாக டாக்டர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் சிறுநீரகவியல் நிபுணராக செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications