ஊக்கமருந்து-தமிழக வீரர் கோபிநாத்துக்கு 2 ஆண்டுகள் தடை
டெல்லி: தமிழக பாடி பில்டிங் வீரர் கோபிநாத் மற்றும் கேரள பளூ தூக்குதல் வீரர் ஷியாம்லால் ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்திய காரணத்துக்காக இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் இந்தாண்டு ஜனவரியில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டிகளில் தமிழக வீரர் கோபிநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதேபோல் பூனேவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் பளூதூக்குதல் தொடரில் பங்கேற்ற 19 வயதான கேரள வீரர் ஷியாம்லால், தமிழக பளூ தூக்கும் வீராங்கனை கவிதா உள்ளிட்டோர் மீதும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டது.
இந்த புகார்களை சுதிர் நந்திராஜோக் என்ற வக்கீல் தலைமையிலான கமிட்டி விசாரித்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் கோபிநாத், ஷியாம்லால் ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு தடை விதிப்பதாக அந்த கமிட்டி தெரிவித்துள்ளது. தமிழக வீராங்கனை கவிதா மீதான குற்றம்சாட்டு குறித்த தீர்ப்பினை இன்னும் வழங்கவில்லை. அதை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த மாதம் இதே போல் மற்றொரு கமிட்டி ஊக்கமருந்து பயன்படுத்திய நான்கு பாடி பில்டிங் வீரர்களுக்கு இரண்டு ஆண்டு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
