பெட்ரோல் விலை: மத்திய அரசு கை கழுவுவதா?
சென்னை: பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த திட்டமிடாமல், நிபுணர் குழுவை அமைத்து சர்வதேச சந்தை விலையில் பெட்ரோல்-டீசலை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடுமையாக கண்டித்துள்ளனர்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விலைவாசியைக் குறைக்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க நிரந்தர நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருள்களின் விலை இனி கட்டுப்பாடின்றி உயர்த்தப்படும். ஆகவே அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இனி கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண்டே போகும்.
விவசாய இடுபொருள்கள் விலைக் குறைப்பு, மானிய விலையில் தட்டுப்பாடின்றி உரம், விளைபொருள்களுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலை போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இவை குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
இல்லாதவர்களுக்கு எதுவும் இல்லை என்பதைத்தான் இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.
வைகோ...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் சாகுபடி கடன் அளிக்காமல், 7 சதவீத வட்டியில் கடன் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் அளிக்காது.
பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த திட்டமிடாமல், நிபுணர் குழு அமைப்பது கண்துடைப்பு அறிவிப்பு.
கடந்த பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை இப்போது பாதியாக குறைத்து இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
மொத்தத்தில் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட் இது என்று கூறியுள்ளார்.
விஜய்காந்த்...
தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய அரசின் வரவு-செலவு கணக்கை அறிவித்தார்களே தவிர, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் இல்லை.
வருமான வரி விலக்குக்கான வரம்பு வெறும் ரூ.10,000 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு. சாதாரண மக்களின் வேலைவாய்ப்பு குறித்து எந்த சிறப்புத் திட்டமும் இல்லை. இப்போது உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை 2014ல் பாதியாகக் குறைப்போம் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைப்புக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறியுள்ளார்.
அடடா அடடா.. ப.சிதம்பரம்:
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், திட்டச் செலவுகளுக்கு ஏராளமாக நிதி ஒதுக்கி இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும். தேர்ந்த திறமையுடனும் கூரிய மதிநுட்பத்துடனும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
திட்டச் செலவுக்கு 3 லட்சத்து 25 ஆயிரத்து 149 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் மத்திய திட்டத்துக்கு ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 840 ஒதுக்கி இருப்பதும் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும்.
மின் உற்பத்தி, சாலை மேம்பாட்டு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தம் பாராட்டத்தக்கது. உர மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டம், ஏழைகளுக்கான உணவு பாதுகாப்புச் சட்டம், உயர்கல்விக்கு வட்டியில்லா கடன் என பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications