For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. மனைவியைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கொடுங்கையூரில் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரின் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் திரு.வி.க. 2-வது லிங்க் ரோட்டில் வசித்தவர் லட்சுமி குட்டி (73). இவரது கணவர் ஆர்.கே.ராம். சென்னை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இறந்து விட்டார். மகன் கேசவசாமி குடும்பத்தோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

லட்சுமி குட்டி சொந்த வீட்டில் கணவருடைய பென்சன் பணத்தில் தனியாக வாழ்க்கை நடத்தி வந்தார். மகன் கேசவசாமி அடிக்கடி வந்து தாயாரை பார்த்து செல்வார்.

கடந்த மாதம் 27-ந் தேதி அன்று மாலையில் கேசவசாமி வழக்கம்போல தாயார் லட்சுமி குட்டியை பார்க்க வந்தார். அப்போது வீட்டில் அவர் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது. லட்சுமி குட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். ஆட்டை அறுப்பதுபோல அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. வயிற்றிலும் சரமாரியாக கத்தி குத்து காயங்கள் இருந்தன. வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எந்தத் துப்பும் இல்லாமல் போலீஸார் திணறினர். கேசவசாமி மீது சந்தேகம் வந்து அவரை விசாரித்தனர். ஆனால் அதில் அவர் குற்றவாளி இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

லட்சுமி குட்டியை கொலை செய்த கும்பல் அவரது செல்போனையும் எடுத்துச் சென்றிருந்தது. இதையடுத்து அந்த செல்போன் புழக்கத்தை போலீஸார் கண்காணித்தனர்.

இந்த நிலையில், கொடுங்கையூரைச் சேர்ந்த ஒரு செல்போன் கடைக்காரர் போலீஸாருக்கு ஒரு தகவல் தெரிவித்தார். ஒரு சிறுவன், லட்சுமிக் குட்டியின் செல்போனை தன்னிடம் விற்க வந்திருப்பதாக அவர் கூறினார்.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். விசாரணையில், லட்சுமிக் குட்டியை தானும், தனது நண்பர்களும் சேர்ந்து கொன்றதாக தெரிவித்தான் அந்த சிறுவன்.

அவனது பெயர் வேல்முருகன். 17 வயதுதான் ஆகிறது. இவனது தந்தை பெயர் மாரி. லட்சுமிக் குட்டி வீட்டுக்கு எதிரே இஸ்திரி கடை நடத்தி வருகிறார்.

அந்தக் கடைக்கு வரும் வேல்முருகன், லட்சுமிக் குட்டி தனியாக இருப்பதைக் கவனித்து வந்து கொலை செய்துள்ளான்.

அவனுடன் பழனி (15), இளவரசன் (13) ஆகியோரும் இருந்துள்ளனர். அவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பழனி 9ம் வகுப்பு படித்துள்ளான். இளவரசன் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மூன்று பேரும் சேர்ந்து மிகக் கொடூரமான கொலையைச் செய்துள்ளது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

போலீஸாரிடம் இந்த வேல்முருகன் கொடுத்துள்ள வாக்குமூலம்..

நானும், பழனியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் அடிக்கடி சினிமா பார்ப்போம். ஓட்டலில் சாப்பிட்டு உல்லாசமாக சுற்றி திரிவோம்.

பழனி ஏதாவது ஒரு பொருளை திருடி விற்று பணம் கொண்டு வருவான். அந்த பணத்தை இருவரும் ஜாலியாக செலவு செய்வோம். தெருவில் விளையாடிய ஒரு சிறுமியின் கையில் கிடந்த தங்க வளையலை திருடி வந்தான். அதை விற்று உல்லாசமாக செலவு செய்தோம்.

திடீரென்று எங்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. செலவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அப்போது லட்சுமி குட்டி வங்கியில் இருந்து பணம் எடுத்து அதை கை நிறைய வைத்து எண்ணிக்கொண்டு வந்தார். எனவே லட்சுமி குட்டியின் வீட்டில் பெரிய அளவில் பணம் இருக்கலாம் என்றும், அதை கொள்ளையடிக்கவும் முடிவு செய்தோம். எங்களுக்கு உதவியாக பழனியின் சித்தப்பா மகன் இளவரசனையும் சேர்த்துக் கொண்டோம்.

கொள்ளையடிக்கும்போது லட்சுமி குட்டி சத்தம் போட்டால் அவரை கத்தியை காட்டி மிரட்ட முடிவு செய்தோம். இதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ரூ.120 கொடுத்து கத்தி வாங்கினோம். கடந்த மாதம் 27-ந் தேதி அன்று பிற்பகல் 2.30 மணியளவில் லட்சுமி குட்டியின் வீட்டுக்கு நாங்கள் 3 பேரும் சென்றோம்.

முதலில் இளவரசன் தண்ணீர் குடிப்பதுபோல லட்சுமி குட்டியின் வீட்டுக்கு சென்று நோட்டம் பார்த்துவிட்டு வந்தான். வீட்டில் அவர் தனியாக இருப்பதாக சொன்னான்.

உடனே நானும், பழனியும் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக சென்றோம். இதை லட்சுமி குட்டி பார்த்துவிட்டார். ஏன் வீட்டுக்குள் வருகிறீர்கள் என்று சத்தம் போட்டார். உடனே நான் லட்சுமி குட்டியை பிடித்துக் கொண்டேன். பழனி கத்தியை காட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினான். ஆனால் லட்சுமி குட்டி ஓவென்று தொடர்ந்து கூச்சல் போட்டார். நான் அவரது வாயை பொத்தினேன்.

திடீரென்று பழனி, லட்சுமி குட்டியின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டான். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். ஆனால் உயிர் போகாமல் துடித்தபடி கிடந்தார். இதனால் அவரது கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல அறுத்தோம். அதன்பிறகு அவரது உயிர் போனது.

பின்னர் பீரோவை திறந்து பார்த்தோம். அதற்குள் இருந்த ரூ.5,200 ரொக்கப் பணத்தையும், செல்போனையும் எடுத்துக் கொண்டு பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டோம்.

கத்தியை கொடுங்கையூரில் உள்ள ஒரு மைதானத்தில் புதைத்து விட்டு, கொள்ளையடித்த பணத்தை பங்கு போட்டோம். செல்போனை நான் எடுத்துக்கொண்டேன். கொலை செய்துவிட்டு தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருக்க ஒரு ஐடியா செய்தோம்.

கில்லி படத்தைப் பார்த்து...

கில்லி படத்தில் போலீஸ் மோப்ப நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவுவார்கள். அதுபோல் நாங்களும் கொலை செய்தவுடன், லட்சுமி குட்டியின் உடல் மீது மிளகாய் பொடியை தூவினோம்.

செல்போனை உபயோகித்தால் அதன் மூலம் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று செல்போனை உபயோகப்படுத்தவில்லை. பின்னர் அதை விற்பதற்கு முயன்றபோது போலீசார் பிடித்துவிட்டனர். ஜாலியாக செலவு செய்வதற்கு ஆசைப்பட்டு கொலை செய்து விட்டோம் என்று கூறியுள்ளான் வேல்முருகன்.

3 பேரும் மைனர்கள் என்பதால் அவர்களை கெல்லீஸில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 பேரும் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X