சிங் இந்தியாவின் பாதுகாவலர்-வாசன் 'ஜிங் ஜக்'!
சேலம்: பொருளாதார வீழ்ச்சி உலகளாவிய அளவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்திய போதும் இந்தியாவில் அதன் தாக்கம் இல்லாததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் சீரிய நிர்வாகவே காரணம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ...
மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும்.
சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் உச்ச நீதி மன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று நம்புகிறோம்.
நோயாளிகளின் நலன் கருதி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட முன் வரவேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாட்டின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் தான் காங்கிரஸ் தலைமையிலான அரசை மீண்டும் பொது மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் கல்வி, சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத் திட்டத்தின் பலன் நாட்டின் கடைக்கோடியில் உள்ள குக்கிராமங்களுக்கும் போய் சேரும் வகையில் அரசின் செயல்பாடு அமைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, உள்கட்டமைப்பு முக்கியமான ஒன்றாகும். இப்பணிகளை விரைவுபடுத்தி, குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கவும் தனி கவனம் செலுத்தவும் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு குழுவை நியமித்துள்ளார்.
இக் குழு தமிழகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும்.
பொருளாதார வீழ்ச்சி உலகளாவிய அளவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்திய போதும் இந்தியாவில் அதன் தாக்கம் இல்லாததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் சீரிய நிர்வாகவே காரணம்.
வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட தேக்க நிலை இந்தியாவில் ஏற்படாத வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றார்.


Click it and Unblock the Notifications
