For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழைகளுக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - ஆசாத் தொடங்கி வைக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

Ghulam Nabi Azad
சென்னை: ஏழை, எளியவருக்கு உயர் ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற திட்டத்தினை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வருகிற 23ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய சாமானிய மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையில் இலவசமாக உயர் சிகிச்சை பெற வகை செய்யும் "உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்'' 2009-10-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

மனிதநேயத்தின் அடையாளமான இந்த மாபெரும் திட்டத்தின் தொடக்க விழா, 23.7.09 (வியாழக்கிழமை), மாலை 4 மணிக்கு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற உள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

விழாவில், நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சந்தர் ரெட்டி, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக இருதய சிகிச்சை மையத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் டாக்டர் தணிகாசலம் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவார்கள்.

விவசாயத் தொழிலாளர் நலவாரியம், மீனவர் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், சீர்மரபினர் நல வாரியம், பழங்குடியினர் நல வாரியம், ஆட்டோரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நல வாரியம், பனைமரத் தொழிலாளர் நல வாரியம், காலணித் தொழிலாளர் நல வாரியம், ஊனமுற்றோர் நல வாரியம், அரவாணிகள் நல வாரியம், முடி திருத்துவோர் நல வாரியம், தையல் தொழிலாளர் நல வாரியம், ஓவியர் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளோரின் குடும்பங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள ஏழை குடும்பங்கள் அனைத்தும் இத்திட்டத்தின் மூலமாகப் பயன்பெறலாம்.

காப்பீட்டு நிறுவனம் ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டையை வழங்கும். அந்த அடையாள அட்டையைக் காண்பித்து, அரசு மருத்துவமனைகள் தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 6 தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்கள் உயர் சிகிச்சைகள் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தவணைத் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.517 கோடியே 30 லட்சத்தை தமிழக அரசே காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X